கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.

கோவை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரப் பதாகைகள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, 'ஓசை தன்னார்வ அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருநெல்வேலியைச் சார்ந்த பேன்ட்செட் என்ற நிறுவனத்தினரே மரங்களில் விளம்பரங்கள் செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தினரே மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்று ஓசை அமைப்பினர் வலியுறுத்தினர்.
அதன் பேரில், அனைத்து மரங்களிலும் மாட்டப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகளையும் அந்த நிறுவனத்தினரே அகற்றினர். இதே போல் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரங்களில் ஒரு குறிப்பிட்ட கல்லூரி தொடர்பான விளம்பரம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டுள்ளது.
அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இவ்வாறாக மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ஒரு மரத்திற்கு ரூ.2000 வீதம் அபராதம் வசூலிக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாகவும் ஓசை அமைப்பைச் சேர்ந்த சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
