கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. பேருந்து நிலையம் முன்பு உள்ள போக்குவரத்து சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் சிக்னலை கடந்து சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், பாலக்காடு சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, உக்கடம் பேருந்து நிலையத்திற்குள் திரும்ப முயன்றது. அப்போது, சுங்கம் வழியாக வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முன்புற சக்கரம் இருசக்கர வாகனத்தின் மீது ஏறி இறங்கியது. இதில், வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேரும் பேருந்தின் கீழ் சிக்கிக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசுப் பேருந்தை நகர்த்தி வைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டனர். இதில், சதீஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹரிபிரசாத் என்பவர் பலத்த காயமடைந்தார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்திற்கு காரணம் அரசுப் பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவு தான் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.