ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை : ஆயிரம் பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகே பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை வடவள்ளி அருகே டிடிவி தினகரனின் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், பேருந்து கட்டண குறைப்பு கண் துடைப்பு மட்டுமே. போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறையே தவிர வருமானம் அடிப்படையில் இதைப் பார்க்கக்கூடாது. ஜெயலலிதா அரசாக இருந்திருந்தால் பேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற்று இருப்பார்கள். போக்குவரத்தில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும்.
சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை ஒருசில முக்கிய அமைச்சர்கள் வாங்கிய பிறகுதான் பேருந்து கட்டண உயர்வு என்பது உண்மைதான். இது குறித்து எங்களிடமே பல தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
பிப்ரவரி இறுதிக்குள் "கூவத்தூர் பழனிச்சாமி" அரசு வீட்டுக்கு அனுப்பப்படும். அ.தி.மு.க.,விலிருந்து நிர்வாகிகளை நீக்குவது சட்டப்படி குற்றம். மத்திய அரசிடம் தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தை அடமானம் வைத்துள்ளது. மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பெற்ற அ.தி.மு.க., சின்னத்தையும், கட்சியையும் நீதிமன்றம் மூலம் மீண்டும் பெறுவோம். அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் சசிகலா தான், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான். என்றார்.