உதகையில் 320 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நலிவடைந்து மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி, ஜனவரி 28
உதகையில் அமைந்துள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை நலிவடைந்து மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது..
நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாளாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத் தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இத்தொழில்களைத் தவிர அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து வந்தது இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை.

உதகையில் கடந்த 1967-ம் ஆண்டு மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியால் 320 ஏக்கர் பரப்பளவில் தொடங்கி வைக்கப்பட்ட பொது துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலையில் போட்டோ பிலிம், பேப்பர், எக்ஸ்ரே, சினிமா பிலிம் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இலாபகரமாக இயங்கி வந்த இத்தொழிற்சாலை கடந்த 1991-ம் ஆண்டு முதல் பொருளாதார கொள்கை, உலக வர்த்தகமயமாதல் மற்றும் பல காரணங்களால் நலிவடையத் துவங்கியது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு பணியாற்றி வந்த நிலையில் தற்போது 150-க்கும் குறைவானவர்களே உள்ளனர். இதுமட்டுமின்றி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் பெரும் சிரமங்கள் நிலவிவருவதாக வேதனைத் தெரிவிக்கின்றனர் அங்கு பணியாற்றுவோர்.
தொடர்ந்து, உற்பத்தியும் முடங்கி வரும் நிலையில் தற்போது பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பெரும்பாலானோர் விரும்ப ஓய்வில் சென்றுவிட்டனர். தற்போது உள்ளவர்களும் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நலிவடைந்த தொழிற்சாலை என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் இதனை மறுசீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர் அங்கு பணியாற்றுவோர்.

இருப்பினும் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாததால் மனமுடைந்த தொழிலாளர்கள் தங்களது அன்றாட பிழைப்பிற்காக சமவெளி பிரதேசங்களுக்கு வேலை தேடி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உதகையைச் சேர்ந்த பல ஆயிரம் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவந்த தொழிற்சாலை முடங்கிக்கிடப்பது அடுத்த தலைமுறையினரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் ஒரு பன்னோக்கு மருத்துவமனையோ அல்லது வேறு தொழிற்சாலையை அமைத்து மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.