தொடர்ச்சியான மணல் திருட்டு மற்றும் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளபோதும் நடவடிக்கை எடுக்காத கோவை மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, ஜனவரி 26
தொடர்ச்சியான மணல் திருட்டு மற்றும் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளபோதும் நடவடிக்கை எடுக்காத கோவை மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட மத்வராயபுரம் பஞ்சாயத்தில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமையில் கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பின் புறப்பட்ட ஆட்சியரை, பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில், வெள்ளியங்கிரி மற்றும் கோவை குற்றாலம் செல்லும் பயணிகள், மரங்களின் ஓரத்தில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு அப்படியே உணவுமீதி மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை போட்டுச்செல்வதாகவும் குற்றம் சாட்டினர். மத்வராயபுரம் பஞ்சாயத்தில் குப்பைகளைக் கொட்ட குப்பைத்தொட்டிகள் இல்லாமல் இருப்பதால் சாலை முழுக்க குப்பைகள் பரவிக் கிடப்பதாக அவர்கள் கூறினர்.
மேலும், அங்குள்ள நொய்யல் ஆற்றில் தொடர்ச்சியாக மணல் திருட்டு நடைபெறுவதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதாகவும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மணல் திருடுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைக் கண்டும் காணாமல் பஞ்சாயத்து செயலாளர் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். பொதுமக்கள் முறையிட்டதையடுத்து, பஞ்சாயத்து செயலாளருக்கு சுகாதாரத்தை பேணிகாக்க ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை வழங்கி விட்டு, அங்கிருந்து சென்றார்.
நொய்யல் ஆற்றில் மணல் திருடியதாக இன்று காலை அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.