கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்
கோவை, ஜனவரி 11
கோவை, செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
செல்வபுரம் தேவேந்திர வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி ராமாயி அம்மாள் (75). இந்தத் தம்பதிக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, சின்னசாமி இறந்து விட்டதால் ராமாயி அம்மாள் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து பார்த்தபோது ராமாயி அம்மாள் உயிரிழந்திரப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அவரது காது, மூக்கு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டின் பீரோவில் இருந்த 17 பவுன் நகையையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றிருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.