கோவை, நவம்பர் 27
கோவை விமான நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட சரக்கு மற்றும் சேவை வரித்துறை ஆணையர் N.J.குமரேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் கேரளாவைச் சேர்ந்த அப்தாப் (37) என்ற வாலிபர் கத்திகளில் மறைத்து வைத்து 816 கிராம் தங்க துண்டுகளை கடத்தி வந்தார். அவரை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவர் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இன்று கோவை சுங்க மற்றும் கலால் வரித்துறை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் மாவட்ட ஆணையர் N.J.குமரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை விமான நிலையத்தில் நேற்று தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த வாலிபர் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து 816 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தைப் பொறுத்தவரையில் அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தங்கம் கடத்தி வருபவர்கள் தொடர்ந்து பிடிபட்டு வருகிறார்கள். பயணிகள் தங்கம் கடத்தி வருகிறார்களா என்பதை கண்காணிக்க அதி நவீன ஸ்கேனர்கள் உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 28.35 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.8.3 கோடி ஆகும்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
என்று அவர் கூறினார்.