கோவைக்கு என்று தனியே பல்வேறு அடையாளங்கள் உள்ளன. ஆனால் சமீபகாலமாக, குண்டும் குழியுமான சாலைகள் கோவையின் மிக முக்கிய அடையாளமாக மாறிவிட்டது.
பாதாள சாக்கடைப் பணிகள், தொலைபேசி இணைப்பு பதிக்கும் பணிகள் என்று பல்வேறு காரணங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளை, மீண்டும் மீண்டும் தோண்டுவது மட்டுமில்லாமல் அவற்றை சரிவர மூடாதது, தரமற்ற சாலைகள் இடுவது போன்ற செயல்களால் அந்த சாலைகள் பழுதாகி பெரிய பள்ளங்களை உருவாக்கி விடுகின்றன.
மழை பெய்ந்து ஓய்ந்த பின்பு, இந்த குழிகளில் மழை மற்றும் கழிவு நீர் பல நாட்கள் தேங்கி விடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதை நிரூபிக்கும் விதமாக, கோவை புலியகுளம் பகுதியில் இருந்து சவுரிபாளையம் நோக்கி செல்லும் வழியில் தான் இந்த வினோதத்தை காண முடிந்தது.
இந்த சாலையில் பல நாட்களாக உள்ள சாலை குழி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீரை கசிய விட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்ட இந்த சாலையில், இன்று காலை முதியவர் ஒருவர் தனது ஆடைகளை துவைக்க தொடங்கிவிட்டார்.

சரியான மின் விளக்கு வசதி இல்லாதமையால் இரவு நேரங்களில் இவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும் வாடிக்கையாகி போய்விட்டது.
உடைந்த குழாய் நீரினால் ஆடைகளை துவைக்கும் இவர், அவற்றை உலர்த்த மின்சாரமற்ற கம்பிகளை நாடுவாரோ என்னவோ??
இன்றும், கோவையில் பெரும்பாலான பகுதிகளில் நீர் பற்றாகுறை தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கும் நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்று குடிநீர் குழாய்கள் உடைந்து 24 மணி நேரமும் நீர் வீணாய் போவது மாநகராட்சியின் அலட்சிய போக்கையே காட்டுகிறது.
மக்களிடம் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தும் மாநகராட்சியே இது போன்று பிரச்சனைகளை உடனடியாக கவனிக்காமல் இருப்பது "அறிவுரை எல்லாம் மக்களுக்கு தான், எங்களுக்கு இல்லை" என்று கூறுவது போல் உள்ளது.