கோவையில் கடந்த 20 ஆண்டுகளாக உரிய சான்றிதழ் இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
கோவை மாவட்டம், ஆலாந்துரை பகுதியில் மருத்துவத்தில் நுட்பம் பயின்ற சான்றிதழைக் கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்த ஆறுமுகராஜ் என்பவரை ஆலாந்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஆறுமுகராஜிடம் உரிய சான்றிதழ்கள் இல்லாதது தெரியவந்தது. இதனை அடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இவர் மீது Ipc 419, 468,471 மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் பிரிவு 15, இந்திய மருந்துகள் மத்திய கவுன்சில் சட்ட பிரிவு 17 ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறுமுகராஜை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேப்போல், தொண்டாமுத்தூர் அடுத்த உலியம்பாளையம் பகுதியில் கலைவாணி கிளீனிக் என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த கலைவாணி என்ற பெண்ணின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் அவருடைய கிளீனிக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தன்னிடம் உரிய ஆவணம் உள்ளதாக கலைவாணி தெரிவித்ததை அடுத்து அவரை காவல் நிலையத்தில் ஆவணங்களுடன் ஆஜராக காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால், அவர் சான்றிதழ்களை ஒப்படைக்காததால் தொண்டாமுத்தூர் காவல்நிலைய போலீசார் வசம் பதிவு செய்து மோசடி பெண்ணான கலைவாணியை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.