கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கிய நிலையில், அப்பகுதியில் நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோ, பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவின. இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதாக வெளியான தகவல்களை அடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, காவல்துறை பாதுகாப்பு அளிக்கின்றது.
இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மர்மநபர்கள் அடித்ததாக தகவல் பரவியது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதியளித்தனர்.
மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமாநிலத் தொழிலாளர் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.