மேம்படுத்தப்பட்ட பயிர் உற்பத்திக்கு பாசன மேலாண்மை அவசியம் - தமிழ்நாடு வேளாண் பல்கலை


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக நீர் நுட்பவியல் மையம் தேசிய அளவிலான “நீடித்த வளர்ச்சிக்கான நுண்நீர் பாசனம், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களும், சவால்களும்” என்ற தலைப்பின் கீழ் மார்ச் 1 முதல் 3 வரையிலான அறிவியல் கருத்தரங்கு பல்கலைக்கழக அண்ணா அரங்கில் தொடங்கியது.

பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் இக்கட்டான இச்சூழலில் நுண்நீர் பாசனத்தில் நாடெங்கும் மேற்கொள்ளப்பட்ட வயல்வெளி ஆய்வுகளின் முடிவுகளை விவாதித்ததற்காகவும் நுண்நீர் பாசன மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய யுக்திகளை வகுப்பதற்காகவும் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இருந்து வேளாண் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு மாணவர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இவ்விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு அரசு, வேளாண் பொறியியல் துறை, தலைமை பொறியாளர் தெய்வேந்திரன் பேசுகையில், சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான இடத்தில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியத்தை விவசாயிகளிடம் விஞ்ஞானிகள் எடுத்துச் செல்ல வேண்டும். பயிர்களுக்கு ஏற்றவாறு, பிரத்யேகமான பாசன கருவிகளை விவசாயிகளிடம் தேவையறிந்து  உற்பத்தி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மத்திய தோட்டக்கலைத்துறை திட்ட இயக்குநர் நரேஷ்மோடி பேசும்போது இந்தியாவில் விவசாயிகளிடம் உள்ள நிலங்கள் சிறு சிறு துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது. அதுவே வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டைக் குறைத்துவருகிறது. 

எனவே, வேளாண் விஞ்ஞானிகள், தொழில்துறையினருடன் இணைந்து நமது நில அமைப்புகளுக்கு ஏற்ற தொழில்நுட்ப கருவிகள் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பசுமைப்புரட்சி நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் ஆர்.கே.சுகூர், வேளாண் பெருமக்களின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த உற்பத்தி நிறுவனங்கள், விவசாயிகளுடன் இணைந்து நேரடியான பலன்களை அளிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி பொது இயக்குநர் (வேளாண் காடுகள்) பேசும்போது, நுண்பாசன நுட்பங்கள் பற்றிய ஆய்வுகள் மேலும் கூர்மைபடுத்த வேண்டும் எனவும், ‘திசு பாசனம்’ என்ற ‘சைலம்’ திசுவில் நேரடியாக தண்ணீர் பாய்ச்சும் நுட்பத்தினை மேற்கொண்டு ஆய்வு செய்து உழவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு.இராமசாமி தலைமையேற்று உரையாற்றும் போது, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கி அரசு அதிகளவில் நிதியுதவி செய்ய வேண்டும். உழவர்கள் வேண்டுவது சரியான நேரத்தில் தரமான விதைகள், இடுபொருட்கள் மற்றும் குறைந்தபட்சமாக மூன்று மாதங்களுக்கான தண்ணீர் தேவையினை உத்திரவாதமாக கிடைக்க செய்யும் போது உழவர்கள் வேளாண் உற்பத்தியினை இருமடங்காக்கி வருமானத்தை மும்மடங்காக்கிக் கொள்வர்.

உழவர்களுக்கு தள்ளுபடியினையோ, மானியத்தையோ தருவதைவிட 90– 120 நாட்களுக்கு தேவையான தண்ணீரினை குழாய்கள் மூலமாக பருவத்தே கிடைக்க செய்வதற்கான உத்திகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வேளாண் பெருமக்கள் நாட்டுக்குத் தேவையான உணவு உற்பத்தியினை வழங்குவது மட்டுமில்லாமல், ஜவுளித்துறை, நறுமண பொருட்கள், உணவு பதப்படுத்தும் துறை மற்றும் தோல் பதனிடும் துறை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வழங்குவதும் அவர்கள் தான். எனவே, வேளாண் விளைபொருட்கள் பன்னாட்டு அளவில் சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டி விற்பனை செய்யவும், சரியான விலையில்லாத காலங்களில் சேமித்து வைக்கவுமான கூட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும்போது தான் உழவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்றார்.



மத்தியபிரதேசத்தில் உள்ள குவாலியார் வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் ஏ.கே.சிங் விழாவினை துவக்கி வைத்து பேசும்போது, பாசன மேலாண்மை பற்றிய ஆய்வுகளை விவசாயிகளின் தேவைக்கேற்ப துரிதப்படுத்த வேண்டும் எனவும், முன்னோடி நுண்நீர் பாசன நுட்பங்களில் உள்ள குறைபாடுகள் தொழில்நுட்பங்கள் மூலம் நிவர்த்தி செய்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விழாவில், தாராபுரத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி மற்றும் தொண்டாமுத்தூரைச் சேர்ந்த வெற்றிவேலன் ஆகிய இரண்டு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்தில் முன்னோடி விவசாயிகளுக்கான விருது வழங்கப்பட்டது. 



மேலும், நுண்நீர் பாசன ஆய்வுகள் மேற்கொண்ட வகையில் நுண்நீர் பாசன ஆயுட்கால விருதை முன்னாள் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராண்.ரா.கே.சிவனப்பனுக்கு கௌரவிக்கப்பட்டது.

நுண்நீர் பாசனத்தில் பல்லாண்டு காலம் பணியாற்றியமைக்காக சிறந்த விஞ்ஞானி விருது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர்நுட்பவியல் மைய முன்னாள் இயக்குநர் முனைவர் பழனிசாமி, முனைவர். எஸ்.ராமன், முனைவர் ஆர்.சக்தி வடிவேல், முனைவர். இ.ஜே.ஜேம்ஸ் மற்றும் முனைவர். ஆர். கோயல் ஆகியோருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கின் தலைவரும் நீர்நுட்ப மையத்தின் இயக்குநருமான முனைவர் பா.செ.பாண்டியன் விருந்தினரை வரவேற்றார். முடிவில் கருத்தரங்கின் செயலாளரும் பேராசிரியருமான முனைவர் சுப.இராமநாதன் நன்றி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...