பிரதமர்கள் மோடி–ஷின்ஜோ அபே முன்னிலையில் இந்தியா–ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா–ஜப்பான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

வர்த்தக பிரமுகர்களுடன் சந்திப்பு.

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அவர் பிரதமராக பதவி ஏற்ற பின்பு அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இது 2–வது முறை ஆகும்.

தலைநகர் டோக்கியோவில் அவர் இரு நாடுகளின் முக்கிய வர்த்தக பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். அப்போது அவர்களை இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து மோடி பேசியதாவது:–

வியத்தகு வாய்ப்புகள்

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று தொழில் தொடங்குவதற்கு வியத்தகு வாய்ப்புகளை கொண்டதொரு நாடாக இந்தியா திகழ்கிறது. பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்தியாவை பெரிதும் திறந்தவெளி பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாக்கிட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்திய தொழில் துறையில் ஜப்பானிய முதலீடுகள் உள்ளே வருவதை விரும்புகிறோம். இதில் உங்களது கவலைகளை தீர்த்து வைக்க தயாராக இருக்கிறோம்.   

பொருளாதார சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை இயற்றி இருக்கிறோம். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக உறுதியான நடவடிக்கைகளின் மூலம் கொள்கைகளை சீர்திருத்தி உள்ளோம்.

சிறந்த இடம்

உலக பொருளாதாரம் நலிவடைந்த நிலையிலும் மற்ற பெரிய நாடுகளையும் விட இந்தியா வேகமான பொருளாதார முன்னேற்றத்தையும் அபரிமிதமான வளர்ச்சியையும் கொண்டு உள்ளது. இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகளால், ஏராளமான தொழில் வாய்ப்புகள் பெருகி உள்ளன. உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் இந்தியாவில் இந்த நிலை தொடரும் என்று அறிவித்து இருக்கின்றன.

பொருட்களை தயாரிப்பதற்கான குறைந்த செலவு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்பு, ஸ்திரமான பொருளாதார நிலை போன்றவை இந்தியாவை தொழில் தொடங்குவதற்கு சிறந்த இடமாக மாற்றி இருக்கிறது.

ஸ்மார்ட் நகரங்கள்

சரக்கு வழித்தடங்கள், டெல்லி – மும்பை தொழில் வழித்தடங்கள், அதிவிரைவு ரெயில்கள், ஸ்மார்ட் நகரங்கள், மெட்ரோ ரெயில் திட்டம், மாசற்ற எரிசக்தி போன்ற 2–வது தலைமுறைக்கான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.  

இந்தியாவின் 10 ஆண்டு விசா திட்டம், இ–சுற்றுலா மற்றும் வருகை விசா திட்டங்களை ஜப்பானியர்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மன்னரை சந்தித்தார்

இதைத்தொடர்ந்து 82 வயது ஜப்பான் மன்னர் அகிடோவை பிரதமர் மோடி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் இந்தியா–ஜப்பான் இடையே நீண்டகால பாசப் பிணைப்பு, ஆசியாவின் எதிர்காலம் குறித்து விவாதித்தனர்.

பின்னர் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயையும் மோடி சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சிவில் அணுசக்தி உள்பட 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவும், ஜப்பானும் சிவில் அணுசக்தியில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும் இது தொடர்பான சம்பிரதாய நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் இறுதி செய்யப்படாமல் இருந்தது.

நேற்று இரு தலைவர்களும் சந்தித்து பேசிய பிறகு இதற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அவர்களுடைய முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதார, பாதுகாப்பு உறவுகள் மேம்படுவதற்கும் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் அணுஉலைகளை அமைப்பதற்கும் வழி பிறந்துள்ளது.

மறைந்த எதிர்ப்பு

அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத ஒரு நாட்டுடன் ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது அபூர்வமான நிகழ்வாகும். இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டுகளால் ஜப்பான் கடும் உயிர்ச்சேதத்தை சந்தித்தது. இதன் காரணமாகவும், 2011–ல் புகுஷிமா அணுசக்தி நிலையத்தில் விபத்து ஏற்பட்டதாலும் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளக்கூடாது என்று ஜப்பானில் எதிர்ப்பு கிளம்பியது. இந்தியா அமைதியான வழியில் அணுசக்தியை பயன்படுத்தி வருவதை சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு மறைந்தது.

ஜப்பானுடன் செய்து கொண்டுள்ள இந்த வரலாற்று பெருமைமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தின் வாயிலாக 48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இணைவதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பெரும் ஊக்கம் தருவதாக அமைந்து இருக்கிறது. தவிர, வியன்னா நகரில் அணுசக்தி வினியோக நாடுகள் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பிரதமர் நன்றி

இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டதற்காக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, ஜப்பான் அரசு மற்றும் ஜப்பான் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

ஜப்பான் தவிர அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, மங்கோலியா, பிரான்ஸ், நமீபியா, அர்ஜெண்டினா, கனடா, கஜகஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்தியாவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...