பாகிஸ்தானில், நின்று கொண்டிருந்த ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதியதில் 20 பேர் பலி பலியானவர்களுக்கு நவாஸ் ஷெரீப் அனுதாபம்

பாகிஸ்தானில் நின்று கொண்டிருந்த ரெயில் மீது மற்றொரு ரெயில் மோதி நேரிட்ட கோர விபத்தில், 20 பேர் பலியாகினர். பலியானவர்களுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஜக்காரியா எக்ஸ்பிரஸ் ரெயில், கராச்சியில் இருந்து முல்தான் நகருக்கு இயக்கப்படுகிறது. இதேபோன்று பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில், கராச்சியில் இருந்து லாகூருக்கு இயக்கப்படுகிறது.

நேற்று வழக்கம்போல ஜக்காரியா எக்ஸ்பிரஸ் ரெயில், கராச்சியில் இருந்து புறப்பட்டு முல்தான் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 7.18 மணிக்கு அந்த ரெயில் கராச்சியின் லாண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தது. வழியில் ஜூமா கோத் ரெயில் நிலையத்தில் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது.

அப்போது நின்றுகொண்டிருந்த பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, வேகமாக வந்து கொண்டிருந்த ஜக்காரியா எக்ஸ்பிரஸ் ரெயில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகளும், ஜக்காரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியும் சின்னாபின்னமாகின. அப்போது எழுந்த பலத்த சத்தத்தால் பயணிகள் அலறினர்.

இந்த கோர விபத்தை கண்ட அந்தப்பகுதி மக்கள் மீட்பு பணியில் உடனடியாக ஈடுபட்டனர். தொடர்ந்து மீட்புப்படையினரும் வந்தனர்.

இந்த விபத்தில் 20 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். சுமார் 65 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரெயில் பெட்டிகளை வெட்டி எடுத்து அவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜின்னா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும்.

தவறான சமிக்ஞை காட்டப்பட்டு விட்டதால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஜக்காரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுனர், சமிக்ஞையை பொருட்படுத்தாமல் சென்று விட்டார் என ஜியோ நியூஸ் சேனல் கூறியது.

இந்த விபத்தின் காரணமாக அந்த தடத்தில் சில மணி நேரம் ரெயில் போக்குவரத்து முடங்கிப்போனது. பல ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்துக்குள்ளான இரு ரெயில்களிலும் மொத்தம் ஆயிரம் பயணிகள் பயணம் செய்ததாக ரெயில்வே டிவிசனல் சூப்பிரெண்டு நசீர் நாசர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேனும், பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார்.

ரெயில்வே மந்திரி கவாஜா சாத் ரபிக், பலியானவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்து தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ரெயில்வே டிவிசனல் சூப்பிரண்டுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். விபத்துக்கு காரணமானவர் யார் என கண்டறிய 72 மணி நேரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தி முடிக்கப்படும்’’ என கூறி உள்ளார்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய ஜக்காரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஓட்டுனரும், துணை ஓட்டுனரும் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Newsletter

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.135.86 கோடி அபராதம்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விà®...