நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் தொடங்கியது.
நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழத்தின் சீசன் தொடங்கியது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பேரி, ஆரஞ்சு, பீச், பிளம்ஸ், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை "பெர்சிமன்' பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் மொத்தம் உள்ள 109 பெர்சிமன் பழ மரங்களில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. பெர்சிமன் பழங்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

பொதுவாக, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்குள் பெர்சிமன் சீசன் துவங்கும். ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இப்பழம், ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் விளங்கி வருகிறது. தக்காளி போன்ற தோற்றத்தைக் கொண்ட இப்பழத்தில் வைட்டமின் "ஏ' மற்றும் "பி' சத்து நிறைந்துள்ளது. இப்பழங்கள் பிற பழங்களை போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக, காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை "எத்தனால்' என்ற திரவத்தில் ஊற வைத்தால்தான் இரண்டு நாட்கள் கழித்து பழுக்கும்.

தென்மாநில அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் மட்டும் தான் இப்பழ மரங்கள் உள்ளன. இப்பழங்கள் கிலோ ரூ. 150-க்கு விற்கப்படுகின்றன. இப்பழ மர நாத்துகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. தற்போது, சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் இந்தப் பழத்தை ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.