திருப்பூர்: பனை மரம், தென்னை மரம் மற்றும் வாழை மரம் மக்கள் வாழ்க்கையுடனும், கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான மரங்களாகும். மக்களுக்காகவே அர்ப்பணித்து கொண்ட மரங்கள் இவை. குறிப்பாக தமிழகத்தின் மாநில மரமாக விளங்கக்கூடிய பனை மரத்தின் எல்லா பகுதியும் மக்களுக்கு பயன்படக்கூடியதாகும்.
திருப்பூர்: பனை மரம், தென்னை மரம் மற்றும் வாழை மரம் மக்கள் வாழ்க்கையுடனும், கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த அத்தியாவசியமான மரங்களாகும். மக்களுக்காகவே அர்ப்பணித்து கொண்ட மரங்கள் இவை. குறிப்பாக தமிழகத்தின் மாநில மரமாக விளங்கக்கூடிய பனை மரத்தின் எல்லா பகுதியும் மக்களுக்கு பயன்படக்கூடியதாகும்.

பனை மரம்
மனிதனின் எந்த முயற்சியும், உதவியும் இன்றி இயற்கையாக தானாக வளரக்கூடியது பனை மரம். அதன் விதை(பனங்கொட்டை) எந்த இடத்தில் விழுகிறதோ, அது எத்தகைய நிலப்பகுதியாக இருந்தாலும் தானாக முளைத்து வளர்ந்துவிடும். அப்படி தானாக வளரக்கூடிய மரம், மனிதர்களுக்கு தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து தியாக செம்மலாக விளங்குகிறது.
நீா் வளம் மிகக் குறைவாக உள்ள வறட்சி மிகுந்த பகுதியிலும் வளரக்கூடியது. பனை மரம் 100 அடி உயரம் வரை வளரக்கூடியவை. எத்தகைய தட்ப வெட்ப நிலையையும், சூறாவளி காற்றையும் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்கக்கூடியவை இவை. வெப்ப மண்டல தாவரம் இந்த மரங்களுள் சில அபூர்வமாகக் கிளைகளுடன் வளரும்.

பனை மரத்தின் வேர் முதல் உச்சியில் உள்ள ஓலை வரை எல்லாமே பயன்படக்கூடியவை. பனை மரத்தின் இலையைத்தான் ஓலை என்கிறோம். பனை மரத்தின் பாளையில் இருந்து கிடைக்கும் சாறு பதநீா் ஆகும். மேலும் நுங்கு, பனைபழம், பனங்கிழங்கு ஆகியவற்றை மனிதர்கள் ருசிக்கின்றனர்.
இவை அணைத்தும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை. பனை ஓலை கூரை வேயவும், பெட்டி, கூடை, விசிறி, பாய், முறம் மற்றும் பூச்சாடி போன்ற கைவினை பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. கயிறு தயாரிப்பு தொழிலில் பனை நார் முக்கிய பங்கு வகிக்கிறது. பனை மரத்தின் தண்டு பகுதியானது வீடு, கட்டிடங்கள் கட்டுவதற்கு உத்திரமாகப் பயன்படுகிறது.

மண் அரிப்பு
பறவைகளின் வாழ்விடமாகவும் பனைமரம் விளங்குகிறது. தூக்கணாங்குருவிகள் தங்கள் கூடுகளைக் கட்ட பெரும்பாலும் பனை மரங்களையே தோ்ந்தெடுக்கின்றன. பனை ஏறும் தொழில் ஆபத்தானது என்பதாலும், உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என்பதாலும் பனை மரங்கள் மெல்ல மெல்ல தங்கள் மவுசை இழக்கத் தொடங்கின.
தற்சமயம் பனை மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு விறகாகப் பயன்படுத்தப்படுகின்றன. மண் அரிப்பைத் தடுப்பதில் பனை மரங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பனை மரத்தின் வேர்கள் அடர்த்தியாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் வேர்கள் மண்ணுக்குள் நீண்டதூரம் ஊடுருவிச் சென்று வலை குவியல் போல் சேர்ந்து மண்ணை இறுக்கமாக பற்றிக்கொள்ளும்.
இதனால் எவ்வளவு தான் மழை பெய்தாலும், நீரோட்டம் பெருக்கெடுத்தாலும் கரைகள் உடையாமல் உறுதியாக இருக்கும்.
காலத்தின் கோலத்தால் பனை மரங்கள் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
இது குறித்து விவசாயி மகாலிங்கம் கூறியதாவது, "பனைமரம் எந்த தட்ப வெட்ப நிலையிலும் வளரக்கூடியது. பனை ஓலை கொண்டு வீடுகளை கட்டுவதால் நிறைய நன்மைகள் உள்ளது. வெயில் காலங்களில் குளிர்ச்சியாகவும், குளிர்காலங்களில் இதமாகவும் மாறும் தன்மையை பனையோலையால் கட்டிய வீடுகள் மாற்றிக்கொள்ளும்.

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 30 கோடி மரங்கள் இருந்தன. தற்சமயம் வெறும் 5 கோடி மரங்களே இருப்பதாகக் கூறப்படுகிறது. நிலமை இப்படியே நீடித்தால் பனை மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் ஆபத்து உள்ளது. இது போன்ற நிலமையைத் தடுக்காமல்விட்டால், இப்படி ஒரு மரம் இருந்தது, அது இன்னென்ன பயன்களை கொடுத்தது என்பதை பாட புத்தகத்தில் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, தமிழகத்தின் மாநில மரமாக விளங்கக்கூடிய பனைமரத்தை அழிவின் விளிம்பில் இருக்கும் மரங்களை பாதுகாத்து, புதிய மரங்களை வளர்க்க வேண்டிய அவசியமாகும்." என்றும் அவர் தெரிவித்தார்.