கோவை : சாய்பாபா காலனி 12வது வார்டு பகுதியின் சாலைகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தோண்டப்பட்டக் குழிகளை சீரமைத்து தருமாறு மாநகராட்சி துணை ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை : சாய்பாபா காலனி 12வது வார்டு பகுதியின் சாலைகளில் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் தோண்டப்பட்டக் குழிகளை சீரமைத்து தருமாறு மாநகராட்சி துணை ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

முன்னாள் மேயர் ஆர். வெங்கடாசலம் மற்றும் 12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.காயத்திரி தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள இந்த மனுவில், ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் குழாய் பதிப்பதற்காக சாலையை தோண்டியதால் சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் வீணாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் முன்னாள் மேயர் ஆர்.வெங்கடாசலம் கூறியதாவது :- ராமலிங்க நகர், கே.ஜி., நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குழாய் தோண்டியதில், சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. குழாயில் ஏற்பட்ட சேதத்தால் சுத்தமான நீர் பல நாட்களாக கிடைக்கவில்லை. சாக்கடைகள் சுத்தம் செய்யாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தார் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
எனவே, உடனடியாக பேட்ச் வொர்க் செய்து மக்கள் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். குழாய் பதிக்க சாலையை தோண்டுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ஆணையர் உறுதியளித்துள்ளார். தவறும்பட்சத்தில் மக்களை திரட்டி அரசியல் சார்பற்ற போராட்டம் நடத்தப்படும், என்றார்.