கோவை : பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் மறைவிற்கு இந்து அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவை : பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் மறைவிற்கு இந்து அமைப்புகளின் தலைவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த பேரூர் ஆதின மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் உடலுக்கு பொதுமக்கள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அர்ஜீன்சம்பத் பேசினார்.
அவர் கூறியதாவது :- தமிழகத்தில் தமிழையும், சைவத்தையும் வளர்த்தவர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார். இவரது சேவை ஆன்மிகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ்மொழி வழிபாடு, சாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் வழிபாடு உள்ளிட்டவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளார். அடிகளாரின் மறைவு ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். தமிழில் அனைத்துவித பட்டப்படிப்புகளையும் படிக்க தமிழ் கல்லூரியை உருவாக்கியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடிகளாரின் மறைவு ஆன்மிகம் மற்றும் தமிழ் உலகிற்கு பேரிழப்பாகும்," என்றார்.
கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் கூறுகையில், "தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் ராமசாமி அடிகளார். கொங்குநாட்டில் சமய வழிபாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தமிழுக்கும், தமிழ் இசைக்கும் பெரும் பங்காற்றியவர்," என புகழாரம் சூட்டினார்.
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவரர் சுவாமிகள் கூறியதாவது :- ஆன்மீகத்துக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்தவர் ராமசாமி அடிகளார். தமிழ் வழிபாட்டை அரசு உத்தரவாக மாற்றியவர் என்ற புகழை பெற்றுள்ளார். சமுதாய சீரமைப்பு மற்றும் சாதிய ஒழிப்பிற்காக பாடுபட்டவர். பன்னிரு திருமுறைகளுக்காக சிறப்பு புத்தகங்களை பதிப்பித்தவராவார். அடிகளார் இறப்பு நாளை தமிழ் ஏற்பு நாளாக அனுசரிக்க வேண்டும், எனக் கூறினார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி பேசியதாவது :- பேரூர் ஆதீனம் ராமசாமி அடிகளார் இறைவனடி சேர்ந்தார் என்பது
தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு ஆகும். சாதி, மத வேறுபாடின்றி திருப்பணிகளை மேற்கொண்டவர். வரும் கால சந்ததிகளுக்கு பல விஷயங்களை கற்று தந்தவர் ஆவார், என்றார்.
ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர் மாரிமுத்து கூறியதாவது :- கொங்கு மண்ணில் இருந்து அவர் ஏற்றிய ஆன்மீக ஜோதி மாநிலம் முழுவதும் பரவியுள்ளது, என புகழாரம் சூட்டினார்.
பா.ஜ.க., மாநில பொருளாளர் எஸ்.ஆர்., சேகர் பேசுகையில்,"அடித்தட்டு மக்களுக்கு சேவையாற்றி, அவர்களை மேன்மைப்படுத்திய பெருமை அடிகளாரைச் சாரும், என்றார்.
தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்ரமணியம் பேசியதாவது :- தமிழ் சமுதாயத்திற்கு அடிகளார் ஆற்றிய பணி அளப்பரியது. தமிழ் முறையை உலகம் முழுவதும் பரப்பியவர்களில் முக்கியமானவர். தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய ஒருவர் இல்லை என்பது பேரிழப்பாகும், இவ்வாறு கூறினார்.
மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது :- தமிழால் ஆன்மிகத்தை வளர்த்த மகான் மறைந்திருக்கிறார். சாந்தலிங்க ராமசாமி அடிகளார் ஆன்மிக உலகிற்கு பேரிழப்பாகும். அடிகளார் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதே, அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும், என்றார்.
இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறுகையில், "பேரூர் ஆதினம் இந்து சமுதாயத்திற்கு பெரும் பணி ஆற்றியுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார், எனக் கூறினார்.