நீலகிரி: உதகை மலைரயில் சேவையை முழுமையாக முன்பதிவு செய்து வெளிநாட்டு புதுமணத் தம்பதி உல்லாச பயணம் செய்தது அனைவரிடத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: உதகை மலைரயில் சேவையை முழுமையாக முன்பதிவு செய்து வெளிநாட்டு புதுமணத் தம்பதி உல்லாச பயணம் செய்தது அனைவரிடத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி மூலம் இயங்கும் இம்மலை ரயில் யுனஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருவது வழக்கம். இதனால், தினசரி ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் மலை ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரகாம் மற்றும் போலந்து நாட்டை சில்வியா என்ற புதுமண தம்பதியர் தேனிலவு கொண்டாட்டமாக தங்களுக்கென்று தனியே மலைரயிலை இயக்கக் கோரி ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டு முன்பதிவும் செய்தனர். ஏற்கனவே, முழு தொகை செலுத்தினால் சிறப்பு மலைரயிலை இயக்குவது நடைமுறையாக உள்ள காரணத்தினால், இவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டது.
அதன்படி, ரூ. 2.85 லட்சம் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு செலுத்திய தம்பதியினர், இதற்கென இந்தியா வந்தனர். இந்த மலை ரயில் பயணத்திற்காக சென்னையில் இருந்து இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்திற்கு வருகை தந்தனர். இவர்களுக்கென மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் வகையில் மூன்று பெட்டிகளோடு சிறப்பு மலை ரயில் தயாராக இருந்தது. ரயிலை முழுமையாக தங்கள் இருவருக்காக மட்டும் பதிவு செய்திருந்த வெளிநாட்டு தம்பதியினரை மேட்டுப்பாளையம் ரயில்நிலைய அதிகாரிகள் வரவேற்று, மலை ரயிலின் சிறப்புகள் குறித்து விளக்கிக் கூறினர்.
பின்னர், பல்சக்கிரத்தின் உதவியோடு நீராவி மூலம் இயங்கும் மலை ரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்த வெளிநாட்டு தம்பதி, அதில் மிகுந்த உற்சாகத்தோடு பயணம் மேற்கொண்டனர்.
இங்கிலாந்து நாட்டில் பொறியாளராக பணியாற்றும் கிரகாம், தனது காதலி சில்வியாவை முதன்முதலில் ஒரு நீராவி ரயிலில் பயணிக்கும் போது கண்டதாகவும், இதனையடுத்தே தங்களது திருமணம் முடிந்தவுடன், பெரிதும் விரும்பும் நாடான இந்தியாவில் இயக்கப்படும் நீராவி மலை ரயிலை முன்பதிவு செய்து இருவர் மட்டுமே பயணித்து இயற்கை அழகினை ரசிக்க வந்துள்ளதாகக் கூறினார். மேலும், தங்களது இந்த தேனிலவு பயணம் மற்றும் இந்தியர்களின் அன்பை என்றும் நினைவில் கொள்வோம், என்றார் கிரகாம்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், பேக்கேஜ் முறையில் சிறப்பு மலை ரயிலை இயக்கி வருகிறோம். முறையாக முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தி அனைவரும் பயணிக்கலாம், என்றனர்.