கோவை: தமிழகத்தில் எத்தனை கட்சிகளை ஒன்றிணைத்தாலும் பா.ஜ.க.,வால் வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தில் எத்தனை கட்சிகளை ஒன்றிணைத்தாலும் பா.ஜ.க.,வால் வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த இரண்டு நாட்களாக சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கோவை வருகிறார். பின்னர், இங்கிருந்து அவர் டெல்லி செல்ல இருக்கிறார். அவரை வரவேற்கவே நான் இங்கு வந்துள்ளேன். அவர் திடீரென கேரளாவில் மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதால், ராகுல் காந்தி விமான நிலையத்தில் இருந்து வெளியே வர வாய்ப்பில்லை, என்றார்.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அனைத்து கட்சிகள் ஒன்றிணைத்தாலும் பா.ஜ.க வை வீழ்த்தி முடியாது என கூறியுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் திருநாவுக்கரசரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் பதிலளித்திருப்பதாவது :- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படி சொல்லியாகத் தான் வேண்டும். சண்டையிட்டால் தானே வீழ்த்த முடியும். ஏற்கனவே, தமிழகத்தில் பா.ஜ.க., வீழ்ந்து தான் உள்ளது. பா.ஜ.க.,விற்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடையாது. மூத்த தலைவர்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க.,வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சி உடைந்துள்ளதால் பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலையில் முதலமைச்சர் உள்ளார். இரட்டை குதிரையில், இரட்டை படகில் சவாரி செய்ய முடியாது என்ற நிலையில் ஆட்சியிலும், கட்சியிலும் இருவர் உள்ளதால் அ.தி.மு.க., கட்சியும், ஆட்சியும் சரியில்லை, எனக் கூறினார்.
தி.மு.க., தலைவராக ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என அ.தி.மு.க., அமைச்சர் ஓ.எஸ்.,மணியன் விமர்சித்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ஸ்டாலின் 50 ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்து, ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்கு உரியது. அமைச்சர் என்ற தகுதியை தவிர்த்து அவருக்கு வேறு என்ன இருக்கிறது. முதலில் அவருடைய தகுதியை பார்க்க வேண்டும். தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்திற்கு உரியது.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதற்கு, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களையும் சேர்ந்து 80 தொகுதியிலும் வெற்றிபெறுவோம் என்று கூட அவர் சொல்லட்டும். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பு கிடையாது.
பா.ஜ.க.,வுக்கு செல்லுமாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ள ஆலோசனைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என நான் முடிவெடுத்துக் கொள்கிறேன். முதலில் அவரது எதிர்காலத்தை அவர் முடிவு செய்யட்டும். அவர் இதுபோல பேசுவது வழக்கமான ஒன்று. இருப்பினும், அவரவர் தமது பணிகளை பார்ப்பதே நலம், எனத் தெரிவித்தார்.