கோவை: தி.மு.க.,வில் கருணாநிதிக்கு பிறகு அடுத்த இடம் ஸ்டாலினுக்குதான் என்பதை உணர்த்தும் வகையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு நடிகர் பார்த்திபன் மஞ்சள் துண்டை அணிவித்தார்.
கோவை: தி.மு.க.,வில் கருணாநிதிக்கு பிறகு அடுத்த இடம் ஸ்டாலினுக்குதான் என்பதை உணர்த்தும் வகையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு நடிகர் பார்த்திபன் மஞ்சள் துண்டை அணிவித்தார்.
"மறக்க முடியுமா கலைஞரை" கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்னும் தலைப்பில் திரைப்பட கலைத்துறையினர் பங்கேற்கும் கலைஞர் புகழஞ்சலி நிகழ்ச்சி நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடந்து வருகிறது. இதில், தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அழகிரி, டி.ஆர். பாலு, தி.மு.க., எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல, திரையுலக நட்சத்திரங்களான
இசைஞானி இளையராஜா, நடிகர்கள் சிவக்குமார், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, நாசர், பிரபு, ராஜேஷ், மயில்சாமி தெலுங்கு நடிகர் மோகன்பாபு, நடிகை ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் 5 மணியளவில் மேடைக்கு வந்த திரைப்பட துறையினர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேடையில் இருந்தவர்களுக்கு சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், கலைஞர் புகைப்படத்தை அனைவருக்கும் வழங்கினார். இதன் பின்னர், அனைவரும் கலைஞருடனான நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் ராஜேஷ் பேசுகையில், "குருவை மிஞ்சாத சிஷ்யன் கலைஞர். 33 நாட்கள் குறைவாக வாழ்ந்தவர்", என புகழாரம் சூட்டினார். இதைத் தொடர்ந்து, பேசிய தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன்பாபு மற்றும் பார்த்திபன் ஆகியோரின் பேச்சுகளை மேடையின் கீழ் இருந்து தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ரசித்தார்.
பின்னர் பேசிய நடிகர் மோகன் பாபு, மு.கருணாநிதி என்பதற்கான விளக்கமளித்து அனைவரின் கைதட்டலையும் பெற்றார். 'மு' என்றால் முன்னுதாரணம், 'க' என்றால் கருணை, 'ரு' என்றால் ருத்ரம், 'நா' என்றால் நாஸ்திகம், 'நி' என்றால் நிதானம், 'தி' என்றால் திராவிடம் என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் பார்த்திபன் மேடையில் பேசி கொண்டிருந்த போது, ஸ்டாலினை அழைத்து அவருக்கு மஞ்சள் சால்வை அணிவித்து, இதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது என பேசிய போது கைதட்டல் பறந்தது.