கோவை: மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை: மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தாண்டு தமிழகத்தில் ஒரே ஒரு ஆசிரியைக்கு மட்டும் வழங்கப்படும் நிலையில், கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஸதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் இவருக்கு நல்லாசிரியர் விருதை வழங்குகிறார். இந்தியா முழுவதிலும் 46 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஸதி நம்மிடம் கூறுகையில், "இந்த விருதுக்காக தமிழகத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் பரிந்துரைக்கப்பட்டதில் எனது பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பெருமையான நிகழ்வின் மூலம் எனது பணி மேலும் சிறக்கும் என்று நம்புகிறேன். இந்த பள்ளியும், மாணவர்களும், ஆசிரியர்க்களும், மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்தும் எனக்கு உதவியதன் மூலமாகவே இந்த விருதை பெற்றுள்ளேன் என்று நினைக்கிறேன்." என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு சிறந்த ஆசிரியைக்கான விருதை வழங்கியுள்ளது.