கோவை: 6 பேரை பலி கொண்ட சுந்தராபுரம் விபத்து தொடர்பான வழக்கில் காவல்துறை மற்றும் தடயவியல் அறிக்கைகளில் இருக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை: 6 பேரை பலி கொண்ட சுந்தராபுரம் விபத்து தொடர்பான வழக்கில் காவல்துறை மற்றும் தடயவியல் அறிக்கைகளில் இருக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை - பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே நேற்று ரத்தினம் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான சொகுசு கார் கோவையை நோக்கி அதிவேகமாக வந்தது. இந்த கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. இந்தக் கோர விபத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட அந்தக் காரின் ஓட்டுநர் ஜெகதீஸ் குமார் மீது ஏற்கனவே 279, 337, 338, 304 (2) ஐ.பி.சி., என்ற 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், கூடுதலாக மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளான 183, 184, 185 ஆகிய மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 185 என்பது மது அருந்தி அல்லது போதையினால் வாகனத்தை இயக்கியது என்ற பிரிவாகும். எனவே, சுந்தராபுரத்தில் நிகழ்ந்த இந்தக் கோர விபத்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததினாலே ஏற்பட்டது என உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, ஓட்டுநர் ஜெகதீஸ் குமாரின் ரத்த மாதிரிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட தடயவியல்அறிக்கையில், அவர் மது அருந்தவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தராபுரத்தில் நிகழ்ந்த ஒரே விபத்து சம்பவம் தொடர்பான வழக்கில் காவல்துறையின் அறிக்கையும் மற்றும் தடயவியல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.