திருப்பூர்: சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு டன் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.
திருப்பூர்: சாமுண்டிபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு டன் கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட பொருட்களை தடுக்கும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆய்வின் போது உணவுப்பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மற்றும் அதனை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் சாமுண்டிபுரம் மெயின் ரோடு பகுதியில் கலப்பட டீத்தூள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று நள்ளிரவு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாமுண்டிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன்(45) என்பவர் டீ தூள் தயாரித்து பேக்கரி உள்ளிட்ட கடைகளுக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
தொடர்ந்து அதிகாரிகள் அவரது குடோனுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர் டீத்தூளில் கலப்படம் செய்து குடோனில் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் அளவு கொண்ட கலப்பட டீத்தூள் பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

மேலும், அந்த குடோனுக்கு சீல் வைத்தனர். பறிமுதல் செய்த டீத்தூள் பாக்கெட்களை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வறிக்கை வந்ததும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.