கோவை: அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வரும் 108 ஆம்புலன்ஸ், மருத்துவமனை நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வரும் 108 ஆம்புலன்ஸ், மருத்துவமனை நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 34 செயல்படுகிறது. அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் 10 முறைக்கு மேல் 108 ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.

இப்படி தினமும் பரபரப்பாக வரும் 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இன்று வழக்கம் போல நோயாளியை மருத்துவமனைக்குள் அனுமதித்துவிட்டு 108 வாகன ஓட்டுனர்கள் மருத்துவ உதவியாளர் வரும்வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வெளியே வரமுடியாதபடி மருத்துவக் கல்லூரியின் பேருந்துகள் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வண்டி வெளியேற வழிவிடும்படி மருத்துவக் கல்லூரி பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது, அவர்கள் வழிவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இப்படியிருக்க, பேருந்து ஓட்டுநர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் 108 ஆம்புலன்சை மருத்துவமனைக்குள் நிறுத்தக் கூடாது என்று கூறியது. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 108 ஆம்புலன்சை மருத்துவமனையையொட்டிய சாலையோரத்தில் நிறுத்தினர்.
இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், "நாங்கள் நேரம் காலம் பார்க்காமல் பொதுமக்களை ஆபத்தான சூழல்களில் சாலைகளிலிருந்தும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சைக்காக அழைத்து வருகிறோம்.
அப்படி நோயாளிகளை அழைத்து வந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு எங்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவர்களுக்காக காத்திருக்கிறோம். எங்களுடைய ஸ்ட்ரெச்சரை தரும் வரை நாங்கள் 108 வாகனத்தை மருத்துவமனையில் இருந்து எடுக்க முடியாது.

அரசு மருத்துவமனைக்கு வந்தால் குறைந்தபட்சம் 20 நிமிடமாவது நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இப்படி இருக்க நாங்கள் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் போய் நிற்பது என்பது எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது." என்றனர்.