கோவை : கொடிசியா அரங்கில் கோவை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.
கோவை : கொடிசியா அரங்கில் கோவை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.
தென்னிந்தியாவின் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சி, கோவை கொடிசியா அரங்கில் நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹூசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, புத்தகக் கண்காட்சி தலைவர் சவுந்தரராஜன் பேசுகையில், "இப்புத்தக திருவிழாவில் 265 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிற இந்திய மொழிகளின் நூல்களின் பதிப்புகள் கண்காட்சியில் கிடைக்கும். மேலும், இக்கண்காட்சியில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த 175 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளனர். புத்தகக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள், விவாத அரங்குகள், உரை நிகழ்ச்சிகள் உள்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கொடிசியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு 60,000 பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர். ரூ. 2.5 கோடி அளவிற்கு வணிகமும் நடைபெற்றது. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். பார்வையாளர்கள் காலை 11.00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். இதனைப் பள்ளி கல்வி துறை செயலர் உதயசந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்," என்றார்.