கோவை : அரசின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், பழங்குடியின மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
கோவை : அரசின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், பழங்குடியின மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள குக்கிராமமான பட்டியார் கோவில் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கான்கிரீட் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புயல் காற்றால், பழமை வாய்ந்த அந்த வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால், மலைப் பகுதியில் வசித்து வந்த பழங்குடியின மக்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள ஆலந்துரை கிராமத்தில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதில், அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

மலைப்பகுதியில் இருந்து பழகிப் போன அவர்கள் வித்தியாசமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழ்வதால், அவர்களது வீடுகளை எவ்வாறு பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் போனது. இதனால், பழங்குடியின மக்களின் பழமை வாய்ந்த வீடுகளின் மேற்கூரைகள் நாளுக்கு நாள் இடிந்து விழுந்து கொண்டே வருகின்றன. மலையை ஒட்டியுள்ள பகுதி என்பதால், தொடர்ந்து பெய்யும் மழையினால், மேற்கூரை தரமற்று போனது.
இதனால், அக்கிராம மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிகமாகக் குடிசைகளை அமைத்து தங்கி வருகின்றனர். ஒருசிலர் மழையில் இருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டின் மீது தார்பாலின்கள் போட்டுள்ளனர். மேலும், பல வீடுகளில் சிமெண்ட் சுவர்கள் இடிந்து விழுந்து, சென்ட்டிரிங் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. எனவே, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒவ்வொரு இரவைக் கடக்கும் போதும், மறுபிறவி எடுப்பதைப் போலவே உணர்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராமவாசி ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, குடிசையில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது குடும்பத்தினர், குடிசை வீட்டில் தங்கியிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

"மக்களுக்கு மீண்டும் குடிசை வீடுகளில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத இது போன்ற நிகழ்வுகளால், கான்கிரீட் வீடுகள் இருந்தும், மீண்டும் பழங்கால முறைக்கே திரும்பியுள்ளனர்," என்கிறார் அப்பகுதிவாசி.