கோவை: டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ எடையிலான பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: டவுன்ஹால் அடுத்த தாமஸ் வீதி பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 350 கிலோ எடையிலான பான்மசாலா, குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை தாமஸ் வீதி பகுதியில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான பூட்டியிருந்த அறை ஒன்றில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று மாலை அங்கு சோதனையிட சென்றனர்.
ஆனால் அந்த கட்டிடத்தில் வாடகைக்கு இருந்த லோகநாதன் என்பவர் குட்கா பொருட்கள் இருந்த அறையை பூட்டு போட்டு சென்றார். இதனையடுத்து வீட்டை திறக்கும்படி சொல்லியும் திறக்கப்படாததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வீட்டை பூட்டி சீல் வைத்துச் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை காவல் நிலையத்திற்கு வந்த கட்டிட உரிமையாளர் சந்தோஷ், வாடகைக்கு இருக்கும் லோகநாதனை பூட்டைத் திறந்து விட சொல்லி இருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து காவல் துறையினரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் சீல் வைக்கப்பட்ட வீட்டை திறந்து உள்ளே சென்று சோதனையிட்டனர்.
அப்போது வீட்டில் சுமார் 350 கிலோ எடையிலான குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த மூன்று மாதமாக வீட்டை வாடகைக்கு எடுத்து லோகநாதன், குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் எனவும் இது தொடர்பாக லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.