கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையோரத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 17-ம் தேதி பூச்சாட்டுடன் தொடங்குகிறது.

27-வது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா சிறப்பாக நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை வடக்கு சப்-கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவில் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம், நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, மின்சாரத்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது, தற்போது ராஜ கோபுர பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் குண்டம் இறங்க வசதிகளாக எவ்வித இடையூறும் இல்லாமல் ஏற்பாடுகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், குண்டம் திருவிழா நிகழ்வின் போது ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள் என்பதால் அடிப்படைத் தேவைகளான குடி தண்ணீர், கழிப்பறை, மருத்துவம், தடையில்லா மின்சாரம் என அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் வனப்பகுதியினை ஒட்டி கோவில் அமைந்துள்ளதால் இரவு நேரத்தில் வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன எல்லைகளில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தி வன பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்தவும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.