கோவை: அசைவ உணவுகளில் ஊட்டச்சத்து மிக்க உணவாக கருதப்படுபவை மீன் வகைகள். ஆடு மற்றும் கோழி இறைச்சிகளைவிட மீன்களில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால் மருத்துவர்களும் மீன் இறைச்சியை அதிகமாக உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
கோவை: அசைவ உணவுகளில் ஊட்டச்சத்து மிக்க உணவாக கருதப்படுபவை மீன் வகைகள். ஆடு மற்றும் கோழி இறைச்சிகளைவிட மீன்களில் பல்வேறு சத்துக்கள் இருப்பதால் மருத்துவர்களும் மீன் இறைச்சியை அதிகமாக உட்கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
ருசியான மீன் இறைச்சியை விரும்பிச் சுவைக்கும் மீன் பிரியர்களுக்கு முள்ளாய் குத்தி வருகிறது, கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கும் 'ஃபார்மலின்' கலப்பட செய்திகள்.

மீன்களின் செதில்கள் சிவப்பாக இருந்தால் அவை கெடாமல் இருப்பதாக அர்த்தம். ஃபார்மலின் எனும் நச்சு திரவம் மீன்களின் உடலில் செலுத்தப்படும் போது, அதன் செதில்கள் பல நாட்களுக்கு சிவப்பாகவே காணப்படும்.
நச்சு திரவம்
கார்சோஜினிக் எனப்படும் ஃபார்மலின் திரவம் மருத்துவதுறையில் பிரேதங்கள் அழுகாமல் பாதுகாக்க உபயோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த திரவத்தை மீன்களின் மேல் தெளித்தும், ஊசி மூலமாக செலுத்தியும், ஐஸ் கட்டிகளில் தடவியும் நாட்கணக்கில் மீன்களை அழுகவிடாமல் செய்கின்றனர். இவ்வாறு ஃபார்மலின் தெளிக்கப்பட்ட மீன்களை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பு உறுதி என்று கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது தென்மாநிலங்களில் ஃபார்மலின் திரவம் தெளிக்கப்பட்ட மீன்கள் டன் கணக்கில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. கேரளா மாநிலத்தில் 'ஆப்ரேஷன் சாகர் ராணி' என்ற பெயரில் களமிறங்கிய உணவு பாதுகாப்புத் துறை, இதுவரை 21,600 கிலோ ஃபார்மலின் செலுத்தப்பட்ட மீன்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கேரளாவில் தற்போது மீன் பிடி தடை காலம் என்பதால் மீன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது, எனவே மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃபார்மலின் தடவி பல நாட்களுக்குத் தேக்கிவைத்து அதிக விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

கேரள அரசால் பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஃபார்மலின் கலப்பட மீன்களில் பெருமளவு தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து தருவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, கேரள எல்லைகளில் கண்டெய்னர்களில் வரும் மீன்களை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.
ஆய்வு
"தமிழகத்தில் ஃபார்மலின் தெளித்த மீன்கள் இல்லவேயில்லை." என்று முழங்கினார் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். அவர் கூறிய சில நாட்களிலேயே சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஃபார்மலின் தெளித்த மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியானது. அடுத்த நாளே கும்பகோணத்தில் 500 கிலோ ஃபார்மலின் கலப்பட மீன்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகள் கடந்த 7-ம் தேதி (சனிக்கிழமை) கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஃபார்மலின் தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
வழி என்ன?
இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஃபார்மலின் திரவம் மீன்களில் தெளிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய என்ன தான் வழி?
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது:-

மீன் வளத்துறையுடன் இணைந்து உக்கடம் மீன் மார்க்கெட்டில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஃபார்மலின் தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து கோவைக்கு வாகனங்களில் மூலம் கொண்டுவரப்படும் மீன்களில் அந்த திரவம் தெளிக்கப்பட்டுள்ளதா? என்பதை, இங்குள்ள வியாபாரிகள் முறையாக பரிசோதித்த பின்னர் அவற்றை வாங்க அறிவுறுத்தியுள்ளோம்.

ஃபார்மலின் தெளிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்ற விழிப்புணர்வை இங்குள்ள வியாபாரிகளிடம் ஏற்படுத்தியுள்ளோம். எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மீன் வியாபாரிகளும் உறுதியளித்துள்ளனர். மீன்கள் மீது ஃபார்மலின் தெளிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தேவையான ஆய்வகங்கள் கோவையிலேயே உள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை."
இவ்வாறு அவர் கூறினார்.
புற்றுநோய்
இதுகுறித்து ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் ஜம்புலிங்கம் கூறுகையில், "பிரேதங்களைப் பதப்படுத்த செய்யப்படும் 'எம்பால்மிங்' என்ற முறையில் ஃபார்மலின் திரவம் பயன்படுத்தப்படுகிறது. மீன்களின் மீது அந்த திரவம் தெளிக்கப்படும் போது சுமாராக பத்து நாட்கள் வரை அவை கெட்டுப்போகாமல் இருக்கும்.

ஆனால், ஃபார்மலின் தெளிக்கப்பட்ட மீனை சாப்பிடும் போது அலர்ஜி, கண் எரிச்சல், வயிர் உபாதை, சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்." என்றார்.
மீன் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையில் இதுவரை ஃபார்மலின் தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் தற்போது இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு மீன் வளத்துறை பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள சோதனை கருவி மூலமாக பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதில், 0.5 பி.பி.எம்.,க்கு குறைவாக ஃபார்மலின் இருந்தாலும், சோதனையில் கண்டுபிடிக்க முடியும்." என்றார்.

கோவையில் இந்த ஆட்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்ற போதிலும், மார்க்கெட்களில் வந்து இறங்கும் மீன்களை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து இருந்து கொண்டுவரப்படும் மீன்களை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். தீவிர கண்காணிப்பு மற்றும் கடுமையான தண்டனைகள் மூலமாகவே இந்த விஷத்தன்மையை ஒடுக்க முடியும்.