கோவை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டி வாலாங்குளம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டி வாலாங்குளம் பகுதி பொதுமக்கள் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டு குலங்களில் ஒன்றான வாலாங்குளக் கரையை ஒட்டி இருந்த வீடுகளை அகற்றி, அங்கு வசித்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கிட உத்தரவிடப்பட்டது.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டாலும், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று வரை வீடுகள் ஒதுக்கிடாமல், மாநகராட்சி நிர்வாகமும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் தங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் புகாரளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாக கூறி வீடுகளை இடித்து நான்கு வருடங்கள் ஆகியும் குடியிருப்பு ஒதுக்கப்படவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் குலுக்களில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ஏழு நாட்களில் வீடு ஒதுக்கப்படும் என்றும், அதற்கான தொகை ரூ.21,000 உடனடியாக கட்ட வேண்டும் என்றும் கூறிச்சென்றனர்.

அதனால், வட்டிக்கு கடன் வாங்கி இந்தத் தொகையை கட்டினோம். ஆனால், ஒன்பது மாதங்கள் முடிந்தும் இன்று வரை வீடு ஒதுக்கப்படவில்லை. வாடகை வீட்டில் வசிப்பதோடு, வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். எனவே மாநகராட்சி தலையிட்டு உடனடியாக குடியிருப்புகள் ஒதுக்கித் தரவேண்டும்." என்றனர்.