நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் மலை தோட்ட காய்கறிகள், பழங்கள், உள்ளிட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலிவான விலையில் வாங்கிச் செல்லும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன்முறையாக சிறப்பு அங்காடி உதகையில் தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும் மலை தோட்ட காய்கறிகள், பழங்கள், உள்ளிட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மலிவான விலையில் வாங்கிச் செல்லும் வகையில் தோட்டக்கலைத்துறை சார்பில் முதன்முறையாக சிறப்பு அங்காடி உதகையில் தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், சைனீஸ் காய்கறிகளான புருக்கோளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இவை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன், சென்னை, கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், உதகை தினச்சந்தைக்கும் விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.
மனம் கவரும் மலைப் பொருட்கள்
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உள்நாடுகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மட்டும் கண்டு ரசித்து செல்வதோடு, உதகையில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் விரும்பி வாங்கி செல்வது, ஹோம் மேடு சாக்லேட், ஊட்டி வர்க்கி, நீலகிரி தைலம், கேரட், வாடா மல்லி ஆகியவையும் அடங்கும்.

சோதனை விற்பனை அங்காடி
மேலும், நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலை அதிகமாக இருப்பதால், அதனை வாங்கி செல்ல சுற்றுலாப் பயணிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தோட்டக்கலைத்துறை சார்பில் மலிவான விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சோதனை விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறையின வளாகத்தில் அமைந்துள்ள இந்த அங்காடியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பயனடையும் வகையில், ரூ. 10 முதல் ரூ. 150 வரையிலான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த மலிவு சிறப்பு அங்காடியில் மாவட்ட ஒருங்கிணைந்த தோட்டக்கலைத்துறை பண்ணையாளர்கள், தும்மணட்டி கொய்மலர் தும்மணட்டி, நஞ்சநாடு காய்கறிகள் பண்ணை, தொட்டபெட்டா மலைப்பழங்கள் பண்ணை, உதகை அரசு தாவரவியல் பூங்கா பண்ணை மலர்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதில், தும்மணட்டி பண்ணையில் இருந்து கொய்மலர்கள், நஞ்சநாடு பண்ணையிலிருந்து பேரிக்காய், பிச்சிஸ், பிளம்ஸ் போன்ற மலை மாவட்ட பழங்கள், சிம்ஸ் பார்க் பண்ணையிலிருந்து ஜாதிக்காய், கேரட், மலைப்பூண்டு, முட்டைகோஸ், பீன்ஸ் போன்ற மலை காய்கறிகளும், பழ ஜாம்கள், பழ ரசங்கள் போன்றவையும், விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து கேக்டஸ், குரோடன்ஸ், லில்லியம், ஜெர்பரா போன்ற மலர்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த மலிவு விலை சிறப்பு அங்காடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நிரந்தரமாக்கப்படுமா..?
இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் அவரிடம் கேட்டபோது:- தோட்டக்கலைத்துறை மாநில இயக்குநர் சுப்பையன் அவர்களின் அறிவுறுத்தலின்படி. முதன் முயற்சியாக இந்த சந்தை வியாபாரம் துவக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த முயற்சி வெற்றியடையும் நிலையில், சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள தோட்டக்கலைத்துறை விற்பனை வளாகத்தில் முழுமையான விற்பனை வளாகம் அமைக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்போது செயல்பட்டு வரும் இந்த தோட்டக்கலை சந்தை வியாபாரம் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.