கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கோவை: குடிநீர் வினியோகம் செய்ய சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் தண்ணீர் வழங்கும் உரிமத்தை தனியார் நிறுவனமாக சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது அக்கட்சியின் மாநில துணை செயலாளர் சுப்பராயன் பேசுகையில், "மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான தனியார் பிரென்சு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே அந்நிறுவனத்துடனான 30 பக்க ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
குடிநீரை வழங்க வேண்டிய அரசின் கடமை என்பதால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். யார் அரசை கேள்வி கேட்டாலும் கைது என்ற நடவடிக்கை, தமிழகம் மற்றும் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை போல் உள்ளது." என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
