திருப்பூர்: திருப்பூரில் பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை, திருப்பூர் கோர்ட் தீர்ப்பு.
திருப்பூர் : காங்கேயம் அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
காங்கயம் அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் எபிநேசன் துரைராஜ் (44). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனைக் காரணமாக மனைவி இவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், 13 வயது இளைய மகள் தந்தை எபிநேசனுடனேயே தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் எபிநேசின் இளைய மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த விபரம் அறிந்த சைல்டுலைன் அமைப்பினர், பிறந்த குழந்தையை சேலம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர்.
மேலும், சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை எபிநேசன் துரைராஜே, தனது மகளை பல மாதங்களாக பாலியல் வல்லுறவு கொண்டதும், இதனால், அவர் கருத்தரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு சட்டப்பிரிவு 5 (எல்), 5 (என்) மற்றும் 5 (ஆர்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பரிமளா ஆஜராகி வாதாடினார். அப்போது, எபிநேசன் துரைராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு மேற்கண்ட ஒவ்வொரு பிரிவின் கீழும் தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் மொத்தம் 3 ஆயுள் தண்டனைகளும், தலா ரூ. 10,000 வீதம் ரூ. 30,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.