கோவை : ஹோப்ஸ் அருகே உள்ள ஜி.ஆர்.ஜி., விடுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், போக்குவரத்துக்கு இடையூறாக சிக்னல் அருகே கொண்டு சென்று பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை : ஹோப்ஸ் அருகே உள்ள ஜி.ஆர்.ஜி., விடுதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல், போக்குவரத்துக்கு இடையூறாக சிக்னல் அருகே கொண்டு சென்று பேருந்துகளை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

ஓட்டுநர்களின் அட்டகாசம்;
அவினாசி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கிறது. அதே போல, இந்தப் பகுதிகளில் கல்லூரிகளும், பள்ளிகளும், மருத்துவமனைகளும் அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசலும் அதிகமாகவே உள்ளது. இதனால், அடிக்கடி இந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்புகளும், விபத்துகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், தனியார் பேருந்துகளும் அரசுப் பேருந்துகளும் டிக்கெட் எண்ணிக்கையை ஏற்றுவதற்காக பணத்திற்காக போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஆபத்தான சூழலில் முடிகிறது.
குறிப்பாக, ஹோப்ஸ் சிக்னலுக்கு முன்புறம் உள்ள ஜி.ஆர்.ஜி., விடுதி அருகே பேருந்து நிறுத்தமானது உள்ளது. ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் பழைய பேருந்து நிறுத்தமான பெட்ரோல் பங்க் அருகே பேருந்துகளை நிறுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள அந்தப் பகுதியில், பேருந்து ஓட்டுநர்களின் விதிமீறல்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஹோப்ஸ் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவியின் மீது, விதிகளை மீறி பேருந்தை நிறுத்த முயன்ற அரசு பேருந்து மீது மோதியது. இதனால், மாணவி மிகவும் ஆபத்தான சூழலில், ஆட்டோ ஓட்டுநர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர்களின் விதிமீறலை நமது சிம்ப்ளிசிட்டி செய்தி குழுவினால் செய்தி சேகரிக்கப்பட்டது.
சிம்ப்ளிசிட்டி செய்தி எதிரொலி:
இதைத்தொடர்ந்து, பீளமேடு போக்குவரத்து போலீசார், அந்தப் பெட்ரோல் பங்க் அருகே பேருந்துகளை நிறுத்தக் கூடாது. அப்படி விதியை மீறி நிற்கும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெரிய எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 2 விளம்பரப் பலகைகளை வைத்தனர். இருப்பினும், பேருந்து ஓட்டுநர்களின் அட்டகாசம் நின்றபாடில்லை. மீண்டும் மீண்டும் விதிகளை மீறி கொண்டிருந்தனர்.

இதனால், பீளமேடு போக்குவரத்து போலீசார் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் விதியை மீறி நிற்கும் பேருந்துகள் மீது அபராதம் விதித்தனர். இதில், தனியார், அரசு பேருந்துகள் என்று பாரபட்சம் பார்க்காமல் விதியை மீறி நிற்கும் அனைத்துப் பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல, பேருந்து ஓட்டுநர்கள் விதியை மீறி இந்த நிறுத்தத்தில் இருப்பதால் ஏற்படும் ஆபத்தையும் விளக்கினார்.
திருந்தாத ஓட்டுநர்கள்;

ஹோப்ஸ் பெட்ரோல் பங்க் அருகே விதியை மீறக் கூடாது என பேருந்து ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அந்தப் பகுதியில் எச்சரிக்கை பதாகைகளை வைத்துள்ளனர். அதேபோல, விதியை மீறும் பேருந்து ஓட்டுநர்கள் மீதும் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் போலீசார் அந்த இடத்தில் நிற்கும் போது மட்டும் விதியை மதிக்கின்றனர். போலீசார் சற்று நகர்ந்து சென்றால், மீண்டும் தங்களின் விருப்பப்படி பேருந்துகளை நிறுத்தி வருகின்றனர். இதுபோன்ற ஓட்டுநர்களின் அலட்சியமான சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியிலும், ஒழுங்குபடுத்தும் போலீசாரின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.