திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் நான்கு பேர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் நான்கு பேர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பாளையக்காட்டை சேர்ந்தவர் சிவமூர்த்தி (47). இவரது மனைவியின் பெயர் துர்கா வைஷ்ணவி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினராவார்.

திருப்பூரில் சி.எஸ். கார்மெண்ட்ஸ் என்ற பெயரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த இவர், இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை செல்வதாக காரில் கிளம்பிச் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். சிவமூர்த்தி தனது காரில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தி இருந்தார். அதனை வைத்து திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிவமூர்த்தியின் கார் ஆம்பூர் அருகே உள்ள வெங்கிளி பகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
உடனே திருப்பூர் போலீசார் வேலூர் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேலூர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆம்பூர் அருகே வெங்கிளி என்ற இடத்தில் சிவமூர்த்தியின் காரை மடக்கிப் பிடித்தனர்.
அதில் இருந்த மூன்று பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரையும் வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது, சிவமூர்த்தியை கொலை செய்ததாக அவர்கள் திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தனர். திருப்பூரில் இருந்து அவரை கடத்தி சென்று மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காட்டில் கொலை செய்ததாகவும், பிணத்தை அவரது காரிலேயே எடுத்துச் சென்று கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி ஏரியில் வீசி விட்டதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் கோவை கணபதியைச் சேர்ந்த விமல், கவுதமன், மணிபாரதி என்று தெரியவந்தது. விசாரணையில் சிவமூர்த்தி அவரது பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த திருப்பூரை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார் என்பதும், இதனை கைவிட மறுத்ததால் அவரை புவனேஸ்வரியின் கணவர் மூர்த்தி கூலிப்படை ஆட்களை வைத்து கடத்தி கொன்றதாகத் தெரியவந்தது.
கடந்த 25-ம் தேதி சிவமூர்த்தியை கடத்திய அன்றே அவரை கொலை செய்து விட்டதாகவும் இரண்டு நாட்கள் காரில் பிணத்துடன் சுற்றித் திரிந்ததாகவும், பின்னர் ஏரியில் உடலை வீசியதாகவும் விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, புவனேஸ்வரியின் கணவர் மூர்த்தியை காரமடையில் வைத்து திருப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இன்று மதியம் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.