திருவள்ளூர்: ஆசிரியர் மீது தீரா பாசம் கொண்ட பள்ளிக் குழந்தைகள் அவரக்கு பணியிட மாறுதல் வந்திருப்பது குறித்து அறிந்து பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
திருவள்ளூர்: ஆசிரியர் மீது தீரா பாசம் கொண்ட பள்ளிக் குழந்தைகள் அவரக்கு பணியிட மாறுதல் வந்திருப்பது குறித்து அறிந்து பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆங்கில ஆசிரியர் பகவான். 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

பகவான், இடமாறுதல் ஆகி இருப்பதை அறிந்ததும் மாணவர்களும், பெற்றோர்களும் துயரத்தில் ஆழ்ந்தனர். மிகச்சிறந்த ஆசிரியர், அவர் மாறுதலாகி செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். பள்ளிக்கூடத்துக்கே பூட்டு போடும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த நிலையில், இடம் மாறுதலுக்கான கடிதத்தை வாங்கி செல்வதற்காக ஆசிரியர் பகவான் பள்ளிக்கு சென்றார். அங்கு அவரை சூழந்து கொண்ட குழந்தைகள் அவரது பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறினார்.

சிலர் அவரது கால்களை கட்டிப்பிடித்தபடி, "சார், போகாதீங்க சார்" என்றனர். மாணவர்களின் கண்ணீர் கடலில் மிதந்த ஆசிரியர் பகவானும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். ஒவ்வொரு மாணவர்களின் தோளிலும் தட்டிக்கொடுத்து "அழாதீங்க" என்று ஆறுதல் படுத்தினார்.
கூட்டத்தில் இருந்து பகவான் வெளியே நடக்கத் தொடங்கியதும் மாணவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். ஒடிச்சென்று அவரை கட்டிப்பிடித்தபடி அழுதனர்.
மாணவர்களின் நெகிழ்ச்சி மிகுந்த பாசப் போராட்டம் ஊடகங்களில் வெளியாகி அனைவரின் நெஞ்சையும் உருக்கியது. இதனை அடுத்து, அவரது பணியிட மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்தார்.
ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கு தனி மரியாதை இருந்தது ஒரு காலம். ஆனால், இந்த காலத்திலும் மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் ஆசிரியர் பகவான்.

அவர் எப்படி பாடம் நடத்தி இருப்பார்? மாணவர்களிடம் எப்படிப் பழகி இருப்பார்? மாணவர்கள் எப்படி நேசித்து இருக்கிறார்கள் என்பதற்கு பள்ளியில் அரங்கேறிய பாசப் போராட்டமே சாட்சி.