கோவை: கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு, கூடுதலாகப் பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: கோவையில் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு, கூடுதலாகப் பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளொன்றிற்கு 12 முதல் 15 விமானங்கள் உள்நாடு மற்றும் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வரும் நிலையில், இது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்ட தொழில்துறையினருக்கு தொழில் நிமிர்த்தமாக சென்றுவர பெரும் உதவியாக இருந்து வந்தது.
இந்நிலையில், கோவையிலிருந்து சென்னை செல்லும் 4 விமானங்கள், பெங்களூரூ செல்லும் 3 விமானங்கள் என 7 விமானங்களின் சேவையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நிறுத்தப்போவதாக 'ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்' அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு கோவை தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த முடிவு தொடர்பான தொழில் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கான்பிடரேசன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் (CII) அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.ஐ.,யின் தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் ரவி சாம் ஆகியோர் ஜெட் ஏர்வேசின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினர். மேலும், கூடுதலாகப் பெரிய ரக விமானங்கள் (Air bus) இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுத்தனர்.

தொடர்ந்து அவர்கள் பேசியதாவது :- விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது தொழில்துறையினரை கடுமையாக பாதிக்கும். இலாபகரமான முறையில் இயங்கி வரும் இந்த சேவைகள் தடைப்படுவதால், சுமார் 25 ஆயிரம் இருக்கைகள் மாதத்திற்கு ரத்தாகும். விமான சேவைகள் குறைக்கப்படுவதால் இருக்கைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தொழில்துறையினர் கூடுதலாக செலவழிப்பதைத் தவிர்க்க, வணிகத்தையே தவிர்க்கும் நிலை ஏற்படும்.
விஸ்டா ஏர், ஏர் ஏசியா போன்றவற்றின் விமானங்கள் நிறுத்த இடமில்லாத நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களின் சேவையை கோவைக்கு மாற்றவேண்டும். அதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரையிலும் சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கோவை விமான நிலையத்தில் இருந்து போயிங், ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர், இணை அமைச்சர்கள், மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.