கோவை : விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணத்தை கேட்டு வாங்கும் சம்பவம் இன்னும் தொடர்கிறது நமது கண் முன்னே... தற்போது கோவையில் ஒரு சம்பவம் அப்பட்டம்..!
கோவை : விபத்து, தற்கொலை போன்ற சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க அரசு மருத்துவமனை ஊழியர்கள் பணத்தை கேட்டு வாங்கும் சம்பவம் இன்னும் தொடர்கிறது நமது கண் முன்னே... தற்போது கோவையில் ஒரு சம்பவம் அப்பட்டம்..!
கோவை அரசு மருத்துவமனை;
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உள்மாவட்டத்தில் மட்டுமில்லாது, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில், தினமும் 5,000 முதல் 7,000 பேர் வரை வெளிநோயாளிகளும், 1,700 முதல் 2,000 பேர் வரை உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனையின் பிணவறை;
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இறந்த உடல்களை உடற்கூறு ஆய்வு செய்கின்றனர். இந்த மருத்துவமனையில் தினமும் குறைந்தபட்சம் 9 முதல் 12 உடல்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்படுகிறது.
இதில், தினமும் சுமாராக சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்கள், தூக்குமாட்டி தற்கொலை செய்தவர்கள், விஷம் அருந்தி தற்கொலை செய்தவர்கள், மர்ம மரணங்கள், கொலை என தினமும் எண்ணிக்கைகள் சுழன்றபடி உடற்கூறு ஆய்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.
இந்த உடற்கூறு ஆய்வுப் பணிக்காக மருத்துவர்கள் சுமார் 5 பேர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, துப்புரவு பணியாளர்கள் 4 பேரும், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் தலா 3 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.
பிணத்தை வாங்க பணம்;

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தினமும் வரும் இறந்த உடல்களை உடற்கூறாய்வு செய்த பின்பு அவர்களின் உறவினர்களிடம் ரூ. 2,000, ரூ. 3,000 என ஆளுக்கு ஏற்றார்போல பணத்தை வாங்கி பொதுமக்களை வேதனைப்படுத்தி வருகின்றனர். மரணத்தை நினைத்து வேதனையோடு வரும் இறந்தவர்களின் உறவினர்களிடம் பணத்தைக் கொடுத்தால் தான் பிணத்தை தருவேன் என பணத்தை மிரட்டிக் கேட்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இப்படி சில மாதங்களுக்கு முன்பு பிணவறையில் பணிபுரிபவர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பின்னர், அவர் மருத்துவமனை அதிகாரிகளின் நடவடிக்கைகளின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடமாற்றத்திற்குப் பிறகு சில மாதங்கள் நோயாளிகளிடம் உறவினர்களிடம் லஞ்சம் வாங்குவது என்பது குறைந்து காணப்பட்டது. ஆனால், மீண்டும் தற்போது லஞ்சம் பொதுமக்களிடம் மிரட்டிக் கேட்பது அதிகரித்துள்ளது
வைரலான பிணவறை ஊழியர்;

கோவை அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராகப் பணிபுரிபவர் பரமசிவம். இவர், இறந்தவர்களின் உடலை உடற்கூறாய்வு முடிந்து வாங்க வருபவர்களிடம் ரூ. 3,000 கேட்டுள்ளார். மேலும், பணம் தந்தால் மட்டுமே பிணத்தை வெளியில் எடுக்க கையெழுத்து போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக், வாட்ஸ்அப் என வேகமாக பரவி வருகிறது.
ஒரு சிலர் பணமில்லாமல் குறைந்த பணத்தைக் கொடுத்து உடலை கேட்டால், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உடலைக் கொடுக்க மறுக்கிறார். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய காவலர் அருகில் இருந்தும், இந்தத் தவறான நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பரமசிவம் இதற்கு முன் இதே புகாரில் சிக்கி மறுபடியும் பணியில் சேர்ந்தவர் ஆவார்.
அதேபோல, அரசு மருத்துவமனையில் உதவி ஜமேதாராக இருக்கும் செல்ல கிருஷ்ணன் என்பவர் தினமும் மருத்துவமனையில் உள்ள பணியாளர்களிடம் பணம் கேட்பதாகவும், அதனால்தான் பணியாளர்கள் லஞ்சம் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ஏழை, எளியோர்கள் அதிகமாக வரும் இந்த அரசு மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் பணி நடைபெறும் என ஊழியர்கள் சொல்வது அனைத்து தரப்பு மக்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.