உதகை: உதகை நகராட்சி மார்க்கெட்டில் 1300 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் வாடகை கட்டணத்தை உயர்த்தியது. தற்போது செலுத்தி வரும் வாடகை கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்த்தியதால், இதனைக் குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.
உதகை: உதகை நகராட்சி மார்க்கெட்டில் 1300 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் நகராட்சி நிர்வாகம் வாடகை கட்டணத்தை உயர்த்தியது. தற்போது செலுத்தி வரும் வாடகை கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு உயர்த்தியதால், இதனைக் குறைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால், நகராட்சி நிர்வாகம் கட்டணத்தை குறைக்கவில்லை. இதனால், இரண்டு ஆண்டுகளாக வியாபாரிகள் புதிய வாடகை கட்டணத்தை செலுத்தாமல் இருந்தனர். இவர்களுக்கு பல முறை வாடகை கட்டணம் செலுத்தக் கோரி நகராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
சீல்
நகராட்சி அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களுக்கு முன், ஒரு கடிதம் அனுப்பினர். அதில், உடனடியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், வியாபாரிகள் வாடகை செலுத்தவில்லை. இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி இன்று காலை திடீரென வந்த நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டில் உள்ள 33 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதனால், அங்கு வியாபாரிகள் திரண்டனர். தொடர்ந்து, முன் அறிவிப்பு இன்றி கடைகளுக்கு சீல் வைத்தது தவறு என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள், "நீங்கள் வாடகை கட்டணம் செலுத்தாத காரணத்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது." எனக் கூறி அங்கிருந்து சென்றனர்.
போராட்டம்
மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைத்ததைத் தொடர்ந்து நகராட்சி மார்க்கெட் வியாபாரிகள் அனைவரும் மார்க்கெட் கேட் முன் திரண்டனர். இதனால், அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், உடனடியாக கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், மார்க்கெட் வளாகம் மட்டுமின்றி, ஊட்டி நகரில் நகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் நகராட்சி சார்பில் கமிஷனர் ரவி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வியாபாரிகள் சார்பில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் முஸ்தபா, செயலாளர் ரவிக்குமார். பொருளாளர் ராஜாமுகமது, வியாபாரிகள் கோபாலகிருஷ்ணன், ரெக்ஸ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில், தற்போதைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்ட அனைத்து கடைகளின் சீல் அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், புதிய வாடகைக் கட்டணம் செலுத்த முடியாது என்றும், பழைய வாடகை கட்டணத்தை காட்டிலும் சற்று கூடுதலாக கட்டணம் செலுத்துவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சீலை அகற்றினர். அதன்பின், வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.