கோவை: கோவை புற்றுநோய் அமைப்பு மற்றும் சிறுதுளி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் புற்று நோயிலிருந்து மீண்டோர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
கோவை: கோவை புற்றுநோய் அமைப்பு மற்றும் சிறுதுளி உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் சார்பில் புற்று நோயிலிருந்து மீண்டோர் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
புற்று நோயிலிருந்து மீண்டோர் தினம் உலகமெங்கும் ஜுன் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு, மரியாதை செய்வதற்காகவும், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கமளிக்கவும் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் அமைந்துள்ள கோயமுத்தூர் புற்று நோய் அமைப்பு மற்றும் சிறுதுளி அமைப்புகள் சார்பாக பல்வேறு தன்னம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முதல் நிகழ்வாக சிறுதுளி வளாகத்தில் அவர்கள் மரக் கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து புற்றுநோயிலிருந்து மீண்டோர் தினத்திற்கான விளக்கு ஏற்றப்பட்டது. பின்னர், புற்றுநோய் பாதிப்புக்கு பிறகான மறுவாழ்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், TV & Brothers நிறுவனர், கனக்லால் அபைசந்த், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதாமோகன், கோவை புற்றுநோய் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர். பாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.

இதில், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதாமோகன் பேசுகையில், "சிறுதுளி தன்னார்வ அமைப்பின் 15-வது ஆண்டு விழா, ஜுன் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் நிகழ்ச்சியாக கோவை புற்று நோய் அமைப்பினரோடு இணைந்து புற்று நோயிலிருந்து மீண்டோர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சாயப் பட்டறைகள் அதிகம் உள்ளது. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் சாயக் கழிவுகள் புற்றுநோய் பாதிப்புகளை உருவாக்க அதிக வாய்ப்புள்ளதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. இவை அனைத்திற்கும் காரணம் அரசு நிர்வாகமோ, அதிகாரிகளோ இல்லை. பொதுமக்களின் அலட்சியமும், அறியாமையுமே இதற்கு காரணம். எனவே, இயற்கை வளங்கள் மாசுபட்டால், மனிதர்களுக்கு நோய் பாதிப்புகள் உண்டாகும் என்பதை அறிந்து, மாசில்லாத தூய்மையான நகரத்தையும், ஆரோக்கியமான வாழ்வையும் உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்றார்.
இந்த நிகழ்ச்சியில், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டிகள், கருத்தரங்கம் மற்றும் சிரிப்பு யோகா பயிற்சி நடத்தப்பட்டன. புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர்.
