கோவை: கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பிய நடிகர் அமீர், எம்.எல்.ஏ., தனியரசு ஆகியோர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவையில் தனியார் தொலைக்காட்சியின் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டுத் திரும்பிய நடிகர் அமீர், எம்.எல்.ஏ., தனியரசு ஆகியோர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை - அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் (புதிய தலைமுறை) சார்பில் விவாதமேடை என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், அ.தி.மு.க., பிரமுகர் செம்மலை, தி.மு.க.,வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன், கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு, செ.கு.தமிழரசு மற்றும் நடிகர் அமீர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் அமீர் பேசும் போது, “தூத்துக்குடி துப்பாக்கிச்சுடு சம்பவம் இனக்கலவரம் என பலர் கூறுகின்றனர். அப்படியென்றால், கோவையில் நடைபெற்ற கலவரத்தை என்ன என்று சொல்வது..?,” இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். அவரது, இந்தப் பேச்சைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால், நிகழ்ச்சி அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ., தனியரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிகர் அமீரை நிகழ்ச்சியில் இருந்து பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட முன்கூட்டியே நிகழ்ச்சி முடிக்கப்பட்டது.
இதனிடையே, நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய அமீர், எம்.எல்.ஏ., தனியரசு மற்றும் கே. பாலகிருஷ்ணன் சென்ற காரை, கனியூர் சுங்கச்சாவடி அருகே சில மர்ம நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பிரபலங்களின் கார்களின் மீது கற்களை வீசிய நபர்கள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் பொருட்களை சேதப்படுத்துதல், கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
