கோவை: கோவை-பெங்களூரூ இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோகெயின் மற்றும் மத்திய கப்பல் மற்றும் நிதி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கோவையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கோவை: கோவை-பெங்களூரூ இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோகெயின் மற்றும் மத்திய கப்பல் மற்றும் நிதி போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று கோவையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இயக்கம்
இந்த ரயில் கோவையில் இருந்து காலை 5.45-க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக மதியம் 12.40-க்கு பெங்களூர் சென்றடையும். இதேபோல், பெங்களூரில் இருந்து மதியம் 2.15-க்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு கோவை வந்தடையும்.

இந்நிகழ்ச்சியில், ரயில் சேவை தொடங்கி வைத்த அதே நேரத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடையில் மின் தூக்கி வசதியையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாகராஜன் பேசுகையில், "கோவை-பெங்களூர் இடையே பகல் நேர ரயில் விடுவது போல் இரவு நேர ரயிலும் விட வேண்டும். அதே போல் கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை வீரபாண்டி மற்றும் புதுப்பாளையத்தில் நிறுத்தி செல்ல மத்திய அமைச்சர் முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்றார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு தமிழகத்திற்கு நிறைய நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறது. கோவையிலிருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த குறுகிய காலத்தில் தமிழகத்தின் முதல் டபுள்- டக்கர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 1898 கோடி ரூபாய் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தின் ரயில்வே துறைக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

அதே நேரம் தமிழகத்தின் ரயில்வே மேம்பாட்டுக்காக ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.4,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 43 புதிய ரயில்கள் தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன. தென்னக ரயில்வேயில் 388 கிலோ மீட்டர் தூரம் மின் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஒசூரில் புதிய விமான நிலையம் கொண்டுவர வேண்டும். கோவை மாநகரில் பஸ் போர்ட் அமைக்க இடம் பார்க்கப்பட்டுள்ளது. கோவையைச் சுற்றி ரிங் ரோடு அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச் சாலையாக மாற்ற மத்திய அரசு ரூ.700 கோடி வழங்கியுள்ளது. அதன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது." என்றார்.

மத்திய இணை அமைச்சர் ராஜன் கோகெயின் பேசுகையில், "கோவை மாநகரம் வேகமாக வளர்ச்சியடையக் கூடிய நகரங்களில் ஒன்றாகும். உதய் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தென்னக இரயில்வே துறை சார்பில் பல கட்டுமான பணிகள் மிகச் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக தென்னக ரயில்வே பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்திய ரயில் துறை இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கோவை ரயில்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல திட்டங்களை சிறப்பாக முடித்துள்ளோம். நிலுவையில் உள்ள திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரயில் வீரபாண்டி மற்றும் புதுப்பாளையம் பகுதியில் நிறுத்திச் செல்ல நடைமேடை அமைக்கப்படும்.
கோவை வடக்கு ரயில்நிலையம் மேம்படுத்தப்படும். மதுரை செல்லும் ரயில்கள் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்." என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் கோட்ட ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்ஷிஸ்தா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், நாகராஜன் மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.