கோவை: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சக்திகளின் குரல் தான் ரஜினியின் குரல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கோவை: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சக்திகளின் குரல் தான் ரஜினியின் குரல் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நிதி உதவி வழங்கிய ரஜினியின் மனித நேயம் பாராட்டத்தக்கது, ஆனால் தூத்துக்குடி சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என முதலமைச்சர் கூறியதையே ரஜினியும் எதிரொலித்திருக்கிறார்.
குரல்
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சகதிகளும் இதே கருத்தை தான் சொல்கின்றன. எனவே ரஜினின் குரல் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் மதவாத சக்திகளின் குரலாக உள்ளது. இது ரஜினி தானாக பேசுகிறார் என்று நம்ப முடியாது. திரைப்படத்தில் ரஜினியை யாரோ இயக்குவது போல, அரசியலிலும் இவருக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
முதலமைச்சரும் நடிகர் ரஜினிகாந்தும், யார் சமூக விரோதிகள்? என்பதை விளக்க வேண்டும். 13 பேர் உயிரிழப்பிற்கு காரணமான சமூக விரோதிகளை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். ஏன் கைது செய்யவில்லை? சமூக விரோதிகள் என இவர்கள் கூறுவது போராடும் மக்களையேயாகும்.
ஸ்டெர்லைட் ஆலை மூடுவது சட்ட பூர்வமாக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க., நடத்தும் மாதிரி சட்டமன்றத்தை ஒரு போராட்ட வடிவமாகத் தான் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் நாம் மாநில உரிமைகளுக்காக போராடி வரும் வேலையில், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிவகங்கையில் தலித்துகள் மீது சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இது காட்டுமிராண்டித் தனமான போக்கு. சிவகங்கையில் கொடூரமாக நடைபெற்ற சாதி வெறி போக்கை கண்டிக்கிறோம். குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காகவே தமிழக வாழ்வுரிமை கட்சி, வேல்முருகன் மீது வழக்கு போட்டுள்ளனர். அவர் மீது புனையப்பட்ட வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.