மேட்டுப்பாளையம்: ரஜினிக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்தோ தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்தோ எந்த அரிச்சுவடியும் தெரியாது என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம்: ரஜினிக்கு தமிழகத்தின் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்தோ தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் குறித்தோ எந்த அரிச்சுவடியும் தெரியாது என்று ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பவானி நதி மாசடைதல் குறித்த விழிப்புணர்வு புத்தக வெளியீட்டு விழாவில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மத்திய அரசின் உளவுத் துறையின் தூண்டுதலின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டால் இந்தியாவின் ஒற்றுமை சிதையும் என்றால் ராஜ துரோகமா? இது ராஜ துரோகம் என்றால் இந்தியாவின் ஒற்றுமை சிதையும் என ஆயிரம் முறை கூறுவோம். இது போன்ற வழக்குகளால் பயமுறுத்த இயலாது.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தோ அல்லது தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் பற்றியோ ரஜினிக்கு எந்த அரிச்சுவடியும் தெரியாது. ஐம்பதாயிரம் மக்கள் திரண்ட ஸ்டேர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் எந்த போலீசாவது தாக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார்களா? சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள் சமூக விரோதிகளா? தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடக்கூடாது என்று தான் நாங்கள் போராடுகிறோம்.
அவர் கூறியுள்ள அறிவுரைகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ரஜினியின் கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களைக் காயப்படுத்தியுள்ளது என்பதை அவர் என்றாவது உணர்வார்." என்றார்.