கோவை: சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
கோவை: சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர் நலன் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு, டெல்லியிலிருந்து வந்திருந்த தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு), மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர் நலச் சங்கங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்களின் நலன் மற்றும் கோரிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்குதல், குடியிருப்புகள் ஒதுக்குதல், தரமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், உயிருக்கு ஆபத்தான துப்புரவு பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கம் சார்பாக தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து சமூகநீதிக்கான இளைஞர்கள் சங்கத்தின் தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவதைத் தடை செய்தல் சட்டம் 2013-ன் படி, மத்திய அரசு சார்பாக 3000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், அவை தூய்மை பணியாளர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. மலக்குழி மரணங்கள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. முறையான விளம்பரம் செய்யாமல், தூய்மை பணியாளர் கணக்கெடுப்பு பணியை செய்து முடித்து, கோவை மாநகரில் மிகக் குறைந்த அளவில் தூய்மை தொழிலாளர்கள் பணிபுரிவதாக மாநகராட்சி நிர்வாகத்தால் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் தேசிய தூய்மை தொழிலாளர் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் உறுதியளித்துள்ளார்." என்றார்.