நீலகிரி: சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது பகல்கோடு மந்து என்றழைக்கப்படும் சூட்டிங் மட்டம். இப்பகுதியில், தமிழ் உட்பட பல மொழி படங்கள் படமாக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
நீலகிரி: கோடைக்காலம் தொடங்கி விட்டது. ஆண்டு முழுவதும் உழைத்து களைத்த மக்கள் 'ஜில்' என்று இருக்க மலை பிரதேசங்களுக்கும், குளிர் பிரதேசங்களுக்கும் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். சுற்றுலா என்றாலே நம்ம ஊர் மக்கள் வண்டியை கிளப்பி உதகைக்குப் புறப்பட்டு விடுவார்கள். சரி..! அப்படி, உதகைக்கு செல்பவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு செல்லலாம்.
அந்தப் பகுதியின் சிறப்புகள் என்ன..? என்பதை நமது வாராந்திரக் கட்டுரையின் மூலம் விளக்கி வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் நாம் காணும் சுற்றுலாப் பகுதி பகல்கோடு மந்து எனப்படும் சூட்டிங் மட்டம்...
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் மண்ணின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் தோடர் இன மக்கள் உட்பட 6 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருவது நீலகிரி மாவட்டத்தின் சிறப்பாகும்.
இந்நிலையில், ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்தாண்டு கோடை விழா கடந்த 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது. சுமார் இதுவரை சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது பகல்கோடு மந்து என்றழைக்கப்படும் சூட்டிங் மட்டம். இப்பகுதியில், தமிழ் உட்பட பல மொழி படங்கள் படமாக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். செங்குத்தான இப்பகுதியில் பாம்பு போன்ற வளைவுகளில் நடைபாதையில் நடந்து செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். மேலும், மலையின் மேல் பகுதிக்கு சென்றால் அழகான மலைகள், இயற்கை சூழ்நிலைகளை கண்டு ரசிக்க முடியும்.

இப்பகுதி, உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. உதகையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சூட்டிங் மட்டம், கூடலூர் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்துகளிலும் செல்லலாம். இந்த சுற்றுலா தலத்தில் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் ஓய்வு பெற்ற தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமியின் முயற்சியால் சூழல் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டு, தோடர் இன மக்கள் இப்பகுதியைப் பராமரித்து வருகின்றனர்.

சூட்டிங் மட்டம் பகுதிக்குள் செல்ல 5 வயதிற்கும் மேல் உள்ள அனைவருக்கும் ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், சிறிய கேமிராவிற்கு ரூ. 30-ம், பெரிய கேமிராவிற்கு ரூ. 50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. காலை 7.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை இப்பகுதியைக் கண்டு ரசிக்கலாம். இதன் நுழைவு வாயில் பகுதியில் தோடர் இன மக்களின் பாரம்பரிய கலை நயத்துடன் டிக்கெட் வழங்கும் கவுண்டர் அமைக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
