கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை வ.உ.சி. மைதானத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். மேலும், அங்கு போலீசார் 3-வது நாளாக குவிக்கப்பட்டனர். இதனால், தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பொதுமக்களை சுட்டுக் கொன்ற போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, ஜல்லிக்கட்டுப் போராட்டம் தீவிரமடைந்த பகுதிகளான கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், மாணவர்கள் சிலர் கோவை வ.உ.சி. மைதானத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மக்களின் நலனைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், போலீசாரால் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் கோசங்களை எழுப்பினர். பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். போராட்டங்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வ.உ.சி., மைதானத்தில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
