கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது.
கோவை: உலக தேனீ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் தேனீ தினம் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் மே மாதம் 19-ம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பூச்சியியல் துறை சார்பில் இன்று மற்றும் நாளை தேனீ தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் கலந்து கொண்டு, தேனீ பெட்டிகள், வளர்ப்பு உபகரணங்கள் மற்றும் தேன் கொண்டு தயாரித்து பல்வேறு உணவுப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய தலைவர் ராமராஜு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "தேனீகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.

தேனீகள் இல்லாத ஒரு உலகத்தை நாம் கற்பனை செய்ய முடியாது. விவசாயிகள் தேனீகளை வளர்க்கலாம். இது கூடுதலாக லாபத்தை அளிப்பதோடு, விளைச்சலையும் அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி தேனீ வளர்ப்பு முறை குறித்து வேளாண் பல்கலை., சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்." என்றார்.