மாணவர் நலனில் அக்கறையின்றி மெட்ரிக்.,கில் இருந்து சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்திற்கு மாறிய தனியார் பள்ளி

கோவை: கோவையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனியார் பள்ளி ஒன்று மெட்ரிக் பாடத் திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்திற்கு மாறியது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி தனியார் பள்ளி ஒன்று மெட்ரிக் பாடத் திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.சி., பாடத் திட்டத்திற்கு மாறியது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவித்து அவர்களை முறையாக வழி நடத்தத் தவறி வருகின்றன இன்றைய சில தனியார் பள்ளி நிர்வாகங்கள். தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களுக்காக மாணவர்களையும், பெற்றோர்களையும் பந்தய குதிரைகளாக மாற்றிவிடுகின்றன. அவ்வாறு தேர்வுகளுக்காக மட்டுமே தயாராகும் குழந்தைகள் தங்கள் தனித்திறமைகளை இழந்து தவிக்கின்றனர். தன்னம்பிக்கை, தனித்திறமை, நல்ல குணங்கள் போன்றவற்றை மேம்படுத்துவதை தவிர்த்து, சுயநல போக்கில், மதிப்பெண் ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் தனியார் பள்ளிகளால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உளவியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

அவ்வாறு, மாணவர் நலனில் அக்கறை கொள்ளாமல், எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல், மெட்ரிக் பாடத் திட்டத்தில் இருந்து சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்திற்கு மாறிய தனியார் பள்ளி குறித்தும், அதனால் மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு. 

வித்யா நிகேதன் 

கோவையில் இரு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது வித்யா நிகேதன் பள்ளி. விளாங்குறிச்சி பகுதியில் இயங்கி வரும் பள்ளி மெட்ரிக் பாடத் திட்டத்தின் அடிப்படையிலும், புலியகுளம் பகுதியில் உள்ள பள்ளியில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த நிலையில், விளாங்குறிச்சியில் செயல்பட்டு வரும் மெட்ரிகுலேசன் பள்ளியில் உள்ள 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகள், இனி சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டது வித்யா நிகேதன் பள்ளி நிர்வாகம். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



இது தொடர்பாக, மாணவர் ஒருவரின் தாய் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர் ஒரு அவசர சந்திப்புக்கு வருமாறு கூறப்பட்டது. அதன்படி, பள்ளிக்குச் சென்றோம். ஆனால், நான் உட்பட சில பெற்றோர்கள் வெளியிலேயே காத்திருக்குமாறு அறிவித்தனர். 

இதனிடையே, அந்த பள்ளியின் தாளாளர் ரஜினி கிருஷ்ணமூர்த்தியை நாங்கள் தனியாக நேரில் சந்தித்து பேசினோம். அப்போது, நமது பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்புகள் வரை இனி சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும். இந்தப் பாடத்திட்ட மாற்றத்திற்கு, உங்களது மகனால் ஈடுகொடுக்க முடியாது. எனவே, டி.சி. (Transfer Certificate) வாங்கிக் கொண்டு உங்களது மகனை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என அடுத்தடுத்த அதிர்ச்சியை எங்களுக்குக் கொடுத்தார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பள்ளி நிர்வாகம் இத்தகைய செயலில் ஈடுபட்டது, எங்களைப் போன்ற பிற மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தது. மேலும், ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மூன்று பேர் 'பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில்' உறுப்பினராக உள்ளனர். அவர்களிடம் முன்னதாகவே அறிவுறுத்திவிட்டோம் என்று அலட்சிய பதில் தந்தார். 

வெறும் மூன்று பெற்றோர்களிடம் மட்டும் அறிவித்தால் மற்றவர்களுக்கு எவ்வாறு தெரியும்..? என்றும் ஏன் முறையாக சுற்றறிக்கை அனுப்பவில்லை என்றும் பல கேள்விகள் எழுந்தன. ஆனால், கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை. 

வெளியேறுங்கள்..!

பள்ளி கட்டணம் செலுத்த அனைத்து பெற்றோர்களிடம் நினைவூட்டத் தெரியும் பள்ளி நிர்வாகத்திற்கு, இதுபோன்ற முக்கிய முடிவுகளைத் தெரிவிக்க நேரமில்லை. மேலும், படிப்பில் சற்றே பின்தங்கிய மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க வலியுறுத்துகின்றனர். மெட்ரிக் பாடத் திட்டத்திலேயே பின் தங்கி இருந்தால் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தில் படிக்க முடியாது என்று விளக்கமும் கொடுக்கின்றனர். 

இது போன்ற வழி நடத்தலுக்காகவா..! எங்கள் குழந்தைகளை இந்த பள்ளியில் சேர்த்தோம் என்று தோன்றியது. எனது மகன் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கும் போது எவ்வாறு அவரை வெளியேற்ற நினைக்கலாம்..? என்றும் மழலையர் பள்ளியில் இருந்து அவர் இங்குதானே படிக்கிறார்..? என்றும் கேள்வி எழுப்பினேன். ஆனால், பள்ளி நிர்வாகம் தனது முடிவில் இருந்து மாறுவதாகத் தெரியவில்லை. ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர், உடனடியாக வேறு பள்ளிக்கு மாறினால், அந்த புதிய சூழலை மனம் ஏற்பதற்குள் அவர் படிப்பு பாழாகாதா..?"என்று பல குமுறல்கள் அவரின் பேச்சில் வெளிப்பட்டது. 

இப்படி முறையான அறிவிப்பின்றி ஒரு பள்ளி தனது பாடத்திட்டத்தை மாற்ற முடியுமா..? என்ற கேள்விக்கு விடைதேடி புறப்பட்டோம். இது குறித்து மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கீதாவிடம் கேட்டோம். 

கேள்வி: ஒரு பாடத்திட்டத்தில் செயல்படும் பள்ளி மற்றொரு பாடத்திட்டத்திற்கு மிக சுலபமாக மாறிவிட முடியுமா..? 

பதில்: இல்லை. அவ்வாறு மாறுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் ஒரு மெட்ரிக் பள்ளியை நிறுத்த அந்த பள்ளி முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த பள்ளியை மூட உத்தரவு கிடைக்கும். இதே போலத்தான், ஒரு பள்ளி படத்திடத்தை மாற்றவும் நடைமுறைகள் உள்ளன. பாடத்திட்டத்தை மாற்ற விரும்பும் பள்ளி சி.பி.எஸ்.சி.,யில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, பள்ளி மாணவர்கள் அனைவரின் பெற்றோரிடமும் கையெழுத்துடன் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர், ஒரு வகுப்பினை (உதாரணமாக 6-ம் வகுப்பு) மட்டும் முதற்கட்டமாக சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். ஓராண்டுக்கு பிறகு, 2 வகுப்புகளை (உதாரணமாக 7 மற்றும் 8-ம் வகுப்புகளை) சி.பி.எஸ்.சி., பாடத்திற்கு மாற்றிக் கொள்ள முடியும். 

கேள்வி: ஒரு சில பெற்றோரிடம் மட்டும் தெரிவித்துவிட்டு, இது போன்ற திட்டங்களை ஒரு பள்ளி செயல்படுத்தலாமா..?

பதில்: நிச்சயமாக முடியாது. ஒரு சிலரிடம் மட்டும் தெரிவித்து விட்டு செயல்படுத்த முடியாது. மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முறையாக ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டு தான் அவர்களிடம் கருத்துக்களை கேட்க வேண்டும். பெற்றோரிடம் கையெழுத்து மூலம் ஒப்புதல் பெற்று அதை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதேபோல, முக்கிய முடிவுகள் தொடர்பான சுற்றறிக்கை பெற்றோர்களுக்கு தனித்தனியே அனுப்பப்பட வேண்டும். இதுதான் விதிமுறை. பள்ளி நிர்வாகம் தனக்கேற்ப விதிகளை மாற்ற இயலாது.

கேள்வி: பாடத்திட்டத்தை மாற்றும் பள்ளி நிர்வாகம், சராசரியாக படிக்கும் மாணவர்களை பள்ளியை விட்டு அனுப்பும் உரிமை உள்ளதா...?

பதில்: வாய்ப்பே இல்லை..! நிச்சயம் அப்படி செய்யக்கூடாது. மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால், அது பள்ளியின் மீதான குற்றமே தவிர மாணவர்கள் மீதான குற்றமல்ல. மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து அமரவைப்பதே தவறு. கட்டாய கல்வி சட்டம் 2009-ன் படி 8-ம் வகுப்பு வரை ஒரு மாணவரை பள்ளியை விட்டு நீக்கும் உரிமை ஒரு பள்ளி நிர்வாகத்திற்கு இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளி நிர்வாகத்திற்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறோம். புகார்கள் வந்தால், அந்த பள்ளியிலேயே மீண்டும் அந்த மாணவரை சேர்க்கும் நடவடிக்கைகள் எடுப்போம். 

கேள்வி: மெட்ரிக் பள்ளிகள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனவா..? 

பதில்: சில பள்ளிகள் விதிமுறைகள் மீறுகின்றன. அது தடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி கழகத்தின் மாநில செயலாளர் நந்தகுமார் கூறியதாவது:-

பாடத்திட்டம் மாறுதல் குறித்து குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அனைத்து பெற்றோர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்க வேண்டும். பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அப்போது தான் பாடத்திட்டத்தை மாற்ற முடியும்.

இந்த நடைமுறைக்குப் பின்னர், மெட்ரிக் போர்டு அதிகாரிகள், சம்மந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன? பெற்றோர்களிடம் அனுமதி பெறப்பட்டதா? உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

புதிய பாடத்திட்டம் புரியாது என்பதற்காக மாணவர்களை வெளியே அனுப்பும் உரிமை பள்ளி நிர்வாகத்திற்கு இல்லை. பள்ளி நிர்வாகம் அப்படி நடந்து கொள்வது பெற்றோர்களின் மனதையும் புண்படுத்தும். இது விதி மீறிய செயலாகும். அவ்வாறு பள்ளி நிர்வாகம் செய்தால், வழக்குத் தொடுக்கும் உரிமை பெற்றோர்களுக்கு உண்டு. இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு சிறந்த பள்ளியில் கல்வியளிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். கஷ்டப்பட்டு உழைத்தேனும் பள்ளி கட்டணத்தை கட்டிவிடுகின்றனர். ஏழ்மையை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்பதற்காக பள்ளி உபகரணங்களை கூட சிறந்தவைகளாக வாங்கித் தருகின்றனர். இப்படியான உள்ளங்களை பள்ளி நிர்வாகங்கள் காயப்படுத்துவது நல்லதல்ல.

குழந்தைகளுக்கு பள்ளி என்பது இரண்டாவது வீடாகும். அது எந்தவகையிலும் ஒருவரை காயப்படுத்துதல் கூடாது. சமூகத்தில் இருக்கும் பழக்க வழக்கங்களை கற்றுத்தரும் ஒரு இடமாகவும் பள்ளிகள் விளங்குகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது அரசு முறையான நடவடிக்கை எடுத்தால் தான், வரும் காலத்தில் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...