கோவை: உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தை புனரமைத்து நவீனமயமாக்கும் பணிகளுக்காக, உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் இரண்டு பேருந்து டிப்போக்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை: உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தை புனரமைத்து நவீனமயமாக்கும் பணிகளுக்காக, உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் இரண்டு பேருந்து டிப்போக்களை இடமாற்றம் செய்ய போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இரண்டு பஸ் டிப்போக்கள் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாலாங்குளத்தையொட்டி சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த டிப்போக்களில் உக்கடம், மதுக்கரை, பாலக்காடு, பொள்ளாச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுகிறது.
குளங்கள் புனரமைப்பும், நவீனமயமாக்கலும்..!
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 8 குளங்களை புனரமைத்து நவீனமயமாக்கும் பணிகளுக்கான வரைவு திட்டங்கள் தயாரிக்கும் பணிகளை டெல்லியைச் சேர்ந்த ஓயாஸிஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, உக்கடம் பெரியகுளம் நடைபாதை அமைக்க ரூ. 39.74 கோடியும், வாலாங்குளம் நடைபாதை (வடக்கு) மற்றும் மேம்பாலத்தின் கீழ்பகுதியை நவீனமயமாக்கும் பணிகளுக்காக ரூ. 48.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கவுள்ளன.
டிப்போக்கள் இடமாற்றம்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பேருந்து டிப்போக்கள் அமைந்துள்ள பகுதிகளை கையகப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தற்போது இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கழிவுநீர் பண்ணை அருகே உள்ள இடத்தில் பேருந்து டிப்போக்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட நிர்வாகத்திடம் மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.

அப்போது, பேருந்து டிப்போவுக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகத்தினரே, தங்களது செலவில் ஏற்படுத்திக் கொடுத்தால், இடமாற்றம் செய்ய சம்மதம் என்ற நிபந்தனையை போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓயாஸிஸுடன் ஆலோசனை:
இதனையடுத்து, டிப்போக்களை இடமாற்றுவது குறித்து ஸ்மார்ட்சிட்டி நிறுவனத்திடம் ஆலோசனை செய்து ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து டிப்போக்கள் இடமாறிய பின்னர், நடைபாதைகள், மோட்டார் பயன்பாடு இல்லாத போக்குவரத்து சாலை, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்காக்கள், உடற் பயிற்சிக் கூடம், உணவகங்கள், நவீன கழிப்பறைகள் ஆகியவற்றை உருவாக்கிடவும், பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தை இணைத்து, இப்பகுதியை சிறந்த சுற்றுலாத் தலமாக உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
